திருமாவளவன் பேச்சை வேண்டும் என்றே திரிக்கிறதா திமுக… தொகுதி பேரத்துக்காக அதிமுகவை அழைப்பதாக பொறுமல்!
தொடர்ந்து மது ஒழிப்பை பற்றி பேசிவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வரும் அக்டோபர் 2-ம் தேதி மிகப்பெரிய மது ஒழிப்பு மாநாட்டுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார். இந்த மாநாட்டுக்காக அறிக்கை வெளியிட்டிருக்கும் திருமாவளவன், மாநாட்டில் பங்கேற்க அதிமுக-வையும் அழைத்திருப்பது பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
‘’போதைப் பொருட்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கு என கடுமையான சட்டங்கள் இருந்தும், காவல்துறையில் சிறப்புப் பிரிவு இருந்தும் அவற்றால் பயன் எதுவும் இல்லை. 2016 சட்டப்பேரவைத் தேர்தல் வரை தமிழ்நாட்டில் மதுவிலக்கு போதைப் பொருள் ஒழிப்பு என்பது அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளின் பட்டியலில் இடம்பெற்றுவந்தது. 'ஆட்சிக்கு வந்தால் உடனே மதுக் கடைகளை மூடுவோம்' என திமுகவும், விசிக இடம்பெற்ற மக்கள் நலக் கூட்டணியும் வாக்குறுதி அளித்தன. அதிமுகவும் படிப்படியாகக் குறைப்போம் என்று கூறியது. ஆனால் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்ற பிறகு தனது வாக்குறுதியை அது நிறைவேற்றவில்லை.
மதுக் கடைகள் மூடப்படுவதைத் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை என சிலர் கூறிவரும் கருத்து உண்மைக்கு மாறானது, உள்நோக்கம் கொண்டது. மரக்காணம் எக்கியர்குப்பத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் வீட்டுப் பெண்கள் 'எங்களுக்கு அரசாங்கம் இப்போது நிவாரணம் கொடுத்து என்ன பயன்? இந்த கிராமத்தில் மட்டும் சுமார் 300 பெண்கள் தாலியை இழந்து விதவைகளாக இருக்கிறோம். எங்களை இப்படி ஆக்கியது இந்த சாராயம் தான். அரசாங்கம் முதலில் இந்த சாராயத்தை ஒழிக்கட்டும்" என்று கதறினார்கள் என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்தது. கள்ளக்குறிச்சியிலும் அதே கோரிக்கையைத்தான் பெண்கள் முன்வைத்தார்கள்.
பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் மதுவிலக்கை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்பிறகு அந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மதுவிலக்குக்குப் பிறகு பெண்கள்மீதான வன்முறை பெருமளவு குறைந்திருக்கிறது எனத் தெரிய வந்துள்ளது. பின் தங்கிய மாநிலமான பீகாரில் அதைச் செய்யும்போது தமிழ்நாட்டில் செய்யமுடியாதா? நிச்சயம் முடியும்.
மது விற்பனை மூலம் கிடைக்கும் நிதி இல்லாவிட்டால் மாநில அரசு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியாது என ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. மாநிலத்தில் உழைக்கக்கூடிய மக்களைக் குடி நோயாளிகளாக்கிவிட்டு மனித வளத்தைப் பாழாக்கிவிட்டு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி என்ன பயன்?
புதிய வருமான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மதுக் கடைகளை மூடத் தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்’’ என திருமாவளவன் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது இந்த மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள அதிமுக-வுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னதுதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ‘’இந்த மாநாட்டை 2026 தேர்தலை முன்வைத்து அல்லது ஒரு யுக்தியாக நினைத்து செய்யவில்லை. மதவாத, சாதி அடிப்படைவாதக் கட்சிகளைத் தவிர அதிமுக உள்ளிட்ட எல்லா கட்சிகளும் பங்கேற்கலாம்'’ எனப் பேசினார்.
உடனே இப்பேச்சுக்கு திமுக தரப்பில் இருந்து எதிர்வினைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சியாக விடுதலை சிறுத்தைகள் இருப்பதால் கடந்த தேர்தலைவிட 2026 தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. 2021 தேர்தலில் விசிக 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்றது. அதனால் இந்தமுறை 10 தொகுதிகளுக்கும் குறையாமல் போட்டியிட வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் திமுக தலைமையை சீண்டிப்பார்க்கிறார் திருமாவளவன். கூட்டணிக் கட்சியாக இருந்துகொண்டே ஆளும் கட்சிக்கு எதிராக பெரிய மாநாட்டை அறிவிக்கிறார். போராட்டம் நடத்துகிறார் திருமாவளவன். இதை உள்நோக்கம் இல்லாமல் செய்யவே முடியாது. விஜய்க்கு வாழ்த்து சொல்கிறார். அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கிறார் எனத்தொடர்ந்து திமுக தலைமையைச் சீண்டும் விஷயங்களை செய்துகொண்டேயிருக்கிறார் திருமாவளவன்'’ என்கிறார் திமுக-வின் முக்கியப்புள்ளி.
செய்தியாளர் சந்திப்பில் ஒரு நிருபர் இந்த மாநாடு மதுவிலக்கை அமல்படுத்த தயங்குகிற திமுகவுக்கு எதிராக நடத்துகிறீர்களா எனக் கேட்க, ‘’தயங்குகிற எல்லோருக்காகவும்தான்… அதிமுகவும் சொல்றாங்க… ஆனா, நடைமுறைப்படுத்தல இல்ல…வேணும்னா அவங்க எங்ககூட சேரட்டும்… அதிமுககூட வந்து பங்கேற்கலாம்… எல்லா கட்சியும் வரல… மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள எல்லோரும் கலந்துகொள்ளலாம்’’ என்றுதான் திருமாவளவன் பேசினார். செய்தியாளரின் கேள்விக்குப் பேச்சுவாக்கில் சொன்னபதில் இது. இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை’’ என்கிறார் விசிக-வின் முக்கிய தலைவர்.