துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்... வெறும் வதந்தியா… உறுதியாகப்போகும் உண்மையா?!
கடந்த சில நாட்களாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், 2026 தேர்தலை மனதில்கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் செய்திகள் கசிந்துகொண்டிருந்தன.
இதற்கிடையே நேற்று திமுக இளைஞரணி மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின், திமுக மூத்த நிர்வாகிகளையும் சந்தித்து வாழ்த்துப்பெற்றார் திமுகா இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின். இதனைத்தொடர்ந்து 2026 தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக்குழுவை அறிவித்திருக்கும் ஸ்டாலின் அதில் அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோரோடு உதயநிதி ஸ்டாலினையும் சேர்த்து அறிவித்திருக்கிறார்.
நேற்றைய விழாவின்போது துணை முதலமைச்சர் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘’எல்லா அமைச்சர்களுமே முதலமைச்சருக்குத் துணைதான்'’ என்றும் ‘’எந்தப் பொறுப்பு வந்தாலும் இளஞரணியை மறந்துவிடமாட்டேன்’’ என்றும் மறைமுகமாகப் பேசியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில் நேற்று துரைமுருகன், சேகர் பாபு உள்ளிட்ட திமுகவின் மூத்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் அதை மகிழ்ச்சியோடு வரவேற்போம் எனப்பேட்டியளித்திருக்கிறார்கள். ‘’உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் எனத் தொண்டர்கள் முதல் மூத்த நிர்வாகிகள் வரை வலியுறுத்தி வருகின்றனர். இதனை நானும் வழிமொழிகிறேன். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக திறம்பட செயலாற்றுவார்'’ எனப் பேட்டியளித்திருக்கிறார் துரைமுருகன்.
இதன்மூலம் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்கப் போவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனத்தெரிகிறது.
தமிழகத்தின் முதலைமைச்சராக கருணாநிதி இருந்தபோது 2009-ம் ஆண்டு மே 29-ம் தேதி மு.க.ஸ்டாலின் துணை முதலைமைச்சராக அறிவிக்கப்பட்டார். 2011 தேர்தல் பணிகளை முன்நின்று நடத்துவதற்காக ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது. இப்போதும் கிட்டத்தட்ட அதே சூழலில் 2026 தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் சூழலில் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்!