பிக் பாஸ் இந்தி 18 
சினிமா

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கழுதை... வலுக்கும் எதிர்ப்பு!

பிக்பாஸ் வீட்டுக்குள் கழுதையை அனுப்பி வைத்திருப்பதற்கு கடும் கண்டனங்கள் கிளம்பியிருக்கிறது.

Aathira

உலகப் புகழ் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவின் பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இந்தி பிக் பாஸ் 18-வது சீசன் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. பாலிவுட் நடிகர் சல்மான்கான் இந்த சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் முதல் பெண் தமிழ் போட்டியாளர் என்ற பெருமையுடன் நடிகை ஸ்ருதிகா அங்கு உள்ளே சென்று இருக்கிறார்.

சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது புது சர்ச்சை ஒன்று வெடித்து இருக்கிறது. அதாவது, பிக் பாஸ் வீட்டுக்குள் கழுதை ஒன்றை அனுப்பி வைத்து அதை போட்டியாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தான் சலசலப்பு எழுந்து இருக்கிறது. குறிப்பாக பீட்டா அமைப்பு இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும், நிகழ்ச்சி தொகுப்பாளரான சல்மான் கானுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

சல்மான்கான்

சல்மான் கானுக்கு அவர்கள் எழுதியிருக்கும் கடிதத்தில், "பிக்பாஸ் வீட்டில் கழுதையை வைத்திருக்கிறீர்கள். இதைப் பார்த்து மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக எங்களுக்கு புகார் கொடுத்துள்ளனர். உடனடியாக, அந்த கழுதையை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்சியில் கழுதையை கொண்டு வருவது சாதாரண விஷயம் கிடையாது. இயல்பிலேயே கழுதைகள் அதிகமாக பதட்டப்படும். பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் சத்தம், அதீத ஒளி இவையெல்லாம் சேர்த்து இன்னும் அதை பயமுறுத்தும். அதனால், உடனடியாக அதை வெளியேற்ற வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த கடிதம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் வயாகாம் 18 நிறுவனத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.