பிராங்க் ஷோ மூலம் சமூகவலைதளங்களில் பிரபலமானவர் பிஜிலி ரமேஷ். இந்த பிரபல்யம் இவருக்கு பல சினிமா வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. ‘கோலமாவு கோகிலா’, ‘நட்பே துணை’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்டப் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தார்.
இதுமட்டுமல்லாது, சின்னத்திரையிலும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக, விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ஒரு சீசனில் கோமாளியாக கலந்து கொண்டார் பிஜிலி ரமேஷ்.
பின்னர் இடையில் எந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலும் படங்களில் நடிக்காமலும் அமைதியாக இருந்தார். அப்போதுதான் அவரது மனைவி யூடியூப் சேனல் ஒன்றில் பிஜிலி ரமேஷூக்கு குடிப்பழக்கம் காரணமாக கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் சிகிச்சைக்காக 60 லட்சம் ரூபாய் தனியார் மருத்துவமனை கேட்டதாகவும் அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என்றும் பேட்டிக் கொடுத்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு 9.45 மணியளவில் பிஜிலி ரமேஷ் காலமாகி இருக்கிறார். இறுதி சடங்கு இன்று மாலை 5 மணியளவில் சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. பிஜிலி ரமேஷ் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.