நடிகர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் நெப்போலியன். இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் அதற்காகவே அமெரிக்காவில் குடும்பத்தோடு குடியேறியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தனுஷூக்கு திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திருமண நிச்சயதார்த்தம் நடத்தி வைத்தார்.
இதனையடுத்து சொத்துக்காகதான் அக்ஷயா தனுஷை திருமணம் செய்கிறார் என்றும், தனுஷால் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடியுமா என்றும் பல்வேறு விமர்சனங்கள் இணைய வெளியில் எழுந்தது. நவம்பர் மாதம் ஜப்பானில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாக நெப்போலியன் குடும்பம் கப்பலில் பயணம் செய்து நேற்று ஜப்பான் சென்றடைந்தார்கள். இதுபற்றி நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கும் நெப்போலியன் தன் மகன் திருமணம் பற்றிய விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அந்தப் பதிவில், ''எங்கள் மூத்த மகன் தனுஷின் 8 ஆண்டுகால கனவு! இந்தியாவில் பிறந்தாலும், சூழ்நிலை காரணமாக உலகின் ஒரு கோடியில் இருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் நாங்கள், மறு கோடியில் இருக்கும் ஜப்பானுக்கு பயணம் செய்ய ஓர் ஆண்டு திட்டமிட்டு, 6 மாத காலமாக செயல் வடிவம் கொடுத்து, ஒரு மாத காலமாக பயணம் செய்து, உங்கள் அனைவரது வாழ்த்துகளாலும் தனுஷின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறோம். எல்லையில்லா மகிழ்ச்சி அவனுக்கு. அளவில்லா மனநிறைவு எங்களுக்கு. இந்த தருணத்தில் ஒரு சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதுபோல எங்கள் வாழ்க்கையை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.
நம் பெற்றோரின் கனவுகளுக்காகவும், நமது கனவுகளுக்காகவும், நம் பிள்ளைகளின் கனவுகளுக்காகவும் அவசியம் வாழ வேண்டும். வாழ்ந்து பார்க்க வேண்டும். கடமையை நிறைவேற்ற வேண்டும்.
இந்த உலகிற்கு நாம் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை. அதுபோல் நாம் இந்த உலகை விட்டு போகும் போதும் எதையும் கொண்டு போகப் போவதில்லை. அவரவர் வாழ்க்கையை அவர்களது மனம்போல் நன்றாக வாழுங்கள். மற்றவரையும் அவர்களது மனம் போல வாழ விடுங்கள். யார் மனதையும் புண்படுத்தாதீர்கள். குறை கூறாதீர்கள், பழிக்காதீர்கள், உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள். உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை மறவாதீர்கள்.
“ஒரு பக்க சொல் ஓர் யானை பலம்” எல்லோரையும் வாழ்த்துங்கள். பிடிக்கவில்லை என்றால் இழிவாக பேசாதீர்கள். அது உங்களுக்கே ஒருநாள் திரும்பவிடும்.
வாழுங்கள்! வாழ விடுங்கள்! நான் போடுகின்ற ஒவ்வொரு பதிவும், எனது திரையுலகின் நடிப்பையும் நிஜ உலகின் வாழ்க்கையையும் பார்த்து ரசிப்பவர்களுக்கும், எங்களை நேசிப்பவர்களுக்கும், எங்களிடம் அன்பை சுவாசிப்பவர்களுக்கு மட்டும்தான். அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் பல' எனத் தெரிவித்துள்ளார்.