'அந்தகன்' படத்தில்... 
சினிமா

'அந்தகன்' படத்துக்காக பிரஷாந்த் எடுத்த ரிஸ்க்... ஷாக் அனுபவம்!

’அந்தகன்’ படத்துக்காகத் தான் எடுத்த ரிஸ்க் குறித்து நடிகர் பிரஷாந்த் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் வெளியாகி ஹிட்டான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ‘அந்தகன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Aathira

பல வருடங்கள் கழித்து ‘அந்தகன்’ படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார் நடிகர் பிரஷாந்த். இது அவருடைய ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் ஹிட்டடித்த ‘அந்தாதூன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்து இயக்கி இருக்கிறார் தியாகராஜன். இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பிரஷாந்த் பகிர்ந்து கொண்டதாவது, “இதில் என்னுடன் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்தி, சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்தாதுன் படத்துக்கும், அந்தகன் படத்துக்கும் நிறைய வித்தியாசங்களை எதிர்பார்க்கலாம். இது, 'ரீமேக்' படம் அல்ல. 'ரீ மேட்' படம். அப்பாவின் இயக்கம், பிரமிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். படத்தில், பார்வையற்றவராக நடித்தது சவாலாக இருந்தது.

நடிகர் பிரஷாந்த்

இந்தப் படத்தில் ஒவ்வொரு சீனிலும் சஸ்பென்ஸ் இருக்கும். பிளாக் காமெடி இருக்கும். அதனால் சிரித்துக் கொண்டே இருக்கும்போது திடீர் ஆச்சரியங்கள் வரும். குறிப்பா என்னுடைய திறமையை வெளிப்படுத்தற மாதிரி பல படங்கள்ல நடிச்சிருந்தாலும். பியானோ இசைக் கலைஞனா நடித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. எனக்கு நிஜமாகவே பியானோ இசைக்கத் தெரியும் என்பதால், என் திறமையை வெளிப்படுத்த இந்தப் படத்தை பயன்படுத்திக் கொண்டேன்.

இந்தப் படத்தில் சஸ்பென்ஸ் நிறைந்த கேரக்டரில் சிம்ரன் வருகிறார். படத்தில் எனக்கு சமுத்திரக்கனிக்கும் மிரட்டலான சண்டைக் காட்சி அமைத்துள்ளோம். இதற்காக மாடியில் இருந்து நிஜமாகவே குதித்து ரிஸ்க் எடுத்தேன். இனி வெள்ளித்திரையில் எனக்கு இடைவெளி இருக்காது. இது வரை ஒவ்வொரு கதைக்கும் என்னைத் தயார்படுத்திக் கொள்ள அந்த கால அவகாசம் தேவையாக இருந்தது. இனி அது இருக்காது. தொடர்ந்து நடிக்கப் போகிறேன்.

’அந்தகன்’ படத்தில் பிரஷாந்த், சிம்ரன்

இந்த அந்தகன் படத்துக்கு அடுத்ததாக விஜயுடன் நடித்த ’கோட்’ ரிலீஸ் ஆகப் போகிறது. நெக்ஸ்ட் அமிதாப் பச்சன் சாருடன் சேர்ந்து நடிக்கும் ஒரு படம் பண்ணுகிறோம். அதுவும் பெரிய பட்ஜெட் படம். நான்கு மொழிகளில் உருவாகிறது. இது தவிர விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’ படத்தை இந்தியில் ‘ரீசார்ஜ்’ என்னும் டைட்டிலில் ரீமேக் செய்கிறோம். அது பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும்'' என்றார்.