ரஜினி, அனிருத், மலேசியா வாசுதேவன் 
சினிமா

'தங்க ரதத்தில்’ முதல் ‘மனசிலாயோ’ வரை... ரஜினி-மலேசியா வாசுதேவனின் ஹிட் பாடல்கள்!

தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்தின் காந்தம் போன்ற தோற்றத்துக்கு, மலேசியா வாசுதேவனின் மயக்கும் குரல் மிகச்சரியான கூட்டணியாக இருந்தது. தங்க ரதத்தில் முதல் மனசிலாயோ வரை, இருவரின் கலவையில் பல திரையிசை ரத்தினங்கள் உருவாகியுள்ளன. அவை என்னென்ன?!

Aathira

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘வேட்டையன்’ படத்தில் ’மனசிலாயோ...’ பாடலில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் கொண்டு மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் கழித்து மலேசியா வாசுதேவன் ரஜினிக்கு பாடல் பாடியிருக்கிறார். இதற்கு முன்பு ரஜினி-மலேசியா வாசுதேவன் கலக்கல் காம்பினேஷனில் வெளியான ஹிட் பாடல்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

’முரட்டுக்காளை’

ரஜினி - எஸ்.பி.பி. காம்போ எப்படி ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்றோ அதுபோலவே பாடகர் மலேசியா வாசுதேவன், ரஜினிக்கு பாடியிருக்கும் பல பாடல்கள் இன்றளவும் ரசிக்கக் கூடியது. முதலில் அவர் ‘தர்மயுத்தம்’ படத்தில் ''ஆகாய கங்கை'' மற்றும் ''ஒரு தங்க ரதத்தில்'' என்ற பாடல்களைப் பாடினார். பின்பு, 1980-ல் வெளியான ‘முரட்டுக்காளை’ படத்தில் ''பொதுவாக என் மனசு தங்கம்'' பாடல் அப்போது சூப்பர் ஹிட்!

’பில்லா’:

நடிகர் ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தப் படங்களில் ‘பில்லா’வும் ஒன்று. செம ஸ்டைலிஷான ரஜினி vs அதற்கு நேர் எதிரான கதாபாத்திரம் என ரஜினி அசத்தியிருப்பார். இதில் மலேசியா வாசுதேவன் பாடிய ''வெத்தலைய போட்டேன்டி'' பாடல் இப்போதைய 2கே கிட்ஸ் வரையிலும் சூப்பர் ஹிட்!

‘மிஸ்டர் பாரத்’:

1986-ல் வெளியான ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் ரஜினியும் சத்யராஜூம் எதிரெதிர் துருவங்களாக நடித்திருப்பார்கள். இந்தப் படத்தின் பெயர் சொன்னதுமே பலருக்கும் ''என்னம்மா கண்ணு செளக்கியமா’' பாடலும் நினைவுக்கு வரும். அந்தப் பாடலைப் பாடியவர் மலேசியா வாசுதேவன்.

'அருணாச்சலம்’:

''பட்டுக்கோட்ட அம்மாளே'', ''போக்கிரிக்கு போக்கிரி ராஜா'', ''சொல்லி அடிப்பேனடி'', ''என்னோட ராசி நல்ல ராசி'' உள்ளிட்ட ஏராளமான ஹிட் பாடல்களை ரஜினிக்கு பாடியிருக்கிறார். கடைசியாக அவர் ரஜினிக்கு பாடிய பாடல், ‘அருணாச்சலம்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ''சிங்கம் ஒன்று புறப்பட்டதே'' பாடல்தான்.

’வேட்டையன்’:

27 வருடங்கள் கழித்து தற்போது ஏஐ தொழில்நுட்பம் மூலம் மலேசியா வாசுதேவன் குரலை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்தப் பாடல்தான் ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள ‘வேட்டையன்’ படத்தின் 'மனசிலாயோ' பாடல். முன்பு ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி. குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் கொண்டு வந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.