'ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் மாதம் 10-ம் தேதி வெளியாகிறது. இதனை ஒட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் எப்போதும்போல கலகலப்பாகப் பேசினார். “ஒவ்வொரு படத்திற்கு டென்ஷன் இருக்கும். ஒரு படம் வெற்றி கொடுத்தால் அடுத்த படமும் வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இருக்கும். படம் தோல்வி அடைந்தால் அடுத்த படம் வெற்றிக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். ஒரு சில படங்கள்தான் மேஜிக் செய்யும். அதில் ‘ஜெயிலர்’ படமும் ஒன்று.
ஞானவேலின் ‘ஜெய்பீம்’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 'உங்கள் கருத்தோடு எனக்கேற்றது போல கமர்ஷியல் படமாக எடுக்க முடியுமா?’ எனக் கேட்டேன். ’லோகேஷ், நெல்சன் போல என்னால் படம் எடுக்க முடியாது. ஆனால், ரசிகர்கள் உங்களை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கும்படி காட்ட வேண்டும் என்று ஆசை’ என்றார் ஞானவேல். எனக்கும் அப்படித்தான் வேண்டும் என நான் சொல்ல இப்படித்தான் ‘வேட்டையன்’ ஆரம்பித்தது.
இதற்கு முன்பு பல இயக்குநர்கள் இந்தியில் என்னையும், அமிதாப் பச்சனையும் இணைத்து படம் எடுக்க முயன்றார்கள். ஆனால், அதற்கான கதை சரியாக அமையவில்லை. ‘வேட்டையன்’ கதை கேட்டதும் அமிதாப் ஒத்துக் கொண்டார் என்ற செய்தி கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில், இந்தியில் நான் அறிமுகமாக காரணமே அவர்தான். அமிதாப்தான் என் ரோல் மாடல். ஃபகத் ஃபாசிலுக்கு கதை சொன்ன பின்பு பணம் கொடுக்கவில்லை என்றாலும் அவர் இதை எல்லாம் பொருட்படுத்தாது ஒப்புக் கொண்டார். அவரைப் போன்ற எதார்த்த நடிகரை நான் பார்த்தது இல்லை. எல்லோரும் சம்மதித்த பின்பு கதை எழுத இரண்டு மாதங்கள் கேட்டார் ஞானவேல். அடுத்து லோகேஷ் படமும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தொடங்க இருந்ததால், லோகேஷிடம் தெரிவித்தேன். அவர், “சார்...ப்ளீஸ்” என்றார். அப்போதுதான் புரிந்தது அவர் ‘கூலி’ படத்தின் கதையை முடிக்க இன்னும் அவகாசம் எதிர்பார்த்தார் என்று.
அனிருத் எனக்கு பிள்ளை மாதிரி. படம் உண்மையாக வெற்றி அடைய வேண்டும். 'வேட்டையன்’ படத்தில் யார் ஹீரோயின் என்று கேட்டேன். மஞ்சு வாரியர் என்று சொன்னார்கள். அவர் மிகவும் தன்மையானவர், திறமையானவர். அவரை படத்தில் வயதானவராகக் காட்டவில்லை. ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். இயக்குநர் ஞானவேலுக்காக இந்தப் படம் வெற்றியடைய வேண்டும். ஞானவேல் போன்ற ஒரு இயக்குநர் இந்த திரைத் துறைக்கு தேவை. கருத்துள்ள கதைகளைச் சொல்ல வேண்டும் என அவர் நினைக்கிறார்.
'வேட்டையன்' படத்துக்கான பூஜை போடும்போதே அக்டோபர் 10-ம் தேதி ரிலீஸ் செய்யவேண்டும் என முடிவு செய்தோம். லைகாவிற்கு அநேக படங்கள் இருந்ததால், இந்த தேதியை அப்போதே அறிவிக்க முடியவில்லை. சகுனிகள் நிறைய இருக்கிற இந்த சமூகத்துல யோக்கியவானா இருக்கறது ரொம்ப கஷ்டம். சாணக்கியத் தனமும் வேண்டும், சாமர்த்தியமும் வேண்டும். சினிமாவில் நடிக்க வந்து 50 வருடங்கள் ஆகப்போகிறது. ஒன்றும் தெரியாமல் ரயில் ஏறி சென்னை வந்தவன் நான். நீங்கள் கொடுத்த ஆதரவால்தான் இங்கு நிற்கிறேன். ரசிகர்களுக்கு நன்றி” என்றார்.