நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். படத்தில் ஒவ்வொருவருடைய கதாபாத்திர அறிமுகத்திற்கான வீடியோவை படக்குழு வெளியிட்டு வருகிறது. இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதற்காக, லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்தடைந்தார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், அனிருத் உட்பட படக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் ரஜினியிடம் பத்திரிக்கையாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். இசை வெளியீட்டு விழாவில் வேறு யாரேனும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்களா எனக் கேட்டபோது அதுபற்றிய விவரம் தனக்குத் தெரியாது எனக் கூறியவர், உதயநிதி துணை முதல்வர் ஆகப் போகிறாரா என்ற கேள்விக்கு “அரசியல் கேள்விகளை என்கிட்ட கேட்காதீங்கன்னு சொன்னேன்ல” என கேள்வி கேட்டவரிடம் கை நீட்டி டென்ஷன் ஆகியிருக்கிறார் ரஜினி. மேலும், ‘வேட்டையன்’, ‘கூலி’ ஆகிய இரண்டு படங்களுமே நன்றாக வந்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.