தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இப்போது கதையில் தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளிவந்த ‘அந்தகன்’ படத்தில் நடித்திருந்தார். இதற்கடுத்து விஜய்யின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தில் இவர் நடிக்க இருக்கிறார் என சொல்லப்பட்டது. மேலும், விஜய்யுடன் நடிப்பதற்காக சிம்ரன் நெருக்கடி கொடுக்கிறார் எனவும் செய்தி வெளியானது. இதற்கு சிம்ரன் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இந்த செய்தி முற்றிலும் பொய் என மறுத்து விளக்கம் கொடுத்தார்.
இப்போது அவர் புதிய படம் ஒன்றில் நடிகர் சசிகுமாருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த புதிய திரைப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கிறது. அண்மையில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இன்று நடிகர் சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு கோடை மாத விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.