படங்களில் நடிப்பது மட்டுமல்லாது ’சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் படங்களையும் தயாரித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘குரங்கு பெடல்’, ‘கொட்டுக்காளி’ ஆகிய படங்கள் கவனம் ஈர்த்தது. திறமையானவர்களைக் கண்டறிந்து நல்ல கதைகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதே இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் நோக்கம் என்பதை பல நிகழ்ச்சிகளிலும் சிவகார்த்திகேயன் சொல்லி இருக்கிறார். இந்த மாத இறுதியில் இவரது நடிப்பில் ‘அமரன்’ படம் வெளியாக இருக்கிறது.
இதற்கடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸை தவறாகப் பயன்படுத்துவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறார். இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், ‘'எங்கள் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்த திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜெண்ட்கள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம். இதற்கு மாறாக தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைதள பதிவுகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.