சூரி உணவகம் 
சினிமா

மதுரை அரசு மருத்துவமனையில் நடிகர் சூரியின் உணவகம் தலையீடு... தன்னார்வலர்கள் குற்றச்சாட்டு!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உணவு வழங்கும் தன்னார்வலர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் நடிகர் சூரியின் அம்மன் உணவகம் தலையீடு உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

Aathira

நடிப்பைத் தாண்டி பல தொழில்கள் செய்வதையும் நடிகர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் சூரி தனது சொந்த ஊரான மதுரையில் அம்மன் உணவகம் என்ற ஹோட்டல் மற்றும் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரது உணவக ஊழியர்களால்தான் தற்போது பிரச்சனை வெடித்திருக்கிறது. மதுரையில் நட்சத்திர நண்பர்கள் என்னும் அமைப்பை சேர்ந்தவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 200 நாட்களுக்கு மேலாக மதிய உணவு தொடர்ந்து கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்தின் எதிரொலியாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மாநகர காவல் ஆணையர், உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனைக்கு வருகை தருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை விதித்துள்ளனர். இந்நிலையில் இன்று வழக்கம் போல நட்சத்திர நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் உணவு வழங்க வந்தபோது மருத்துவமனை பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து புதிய விதிமுறைகளை எடுத்துரைத்து வெளியேற்றியுள்ளனர்.

ஆனால், தன்னார்வலர்களோ, அரசு மருத்துவமனை வளாகத்தின் உள்ளே நடிகர் சூரியின் அம்மன் உணவகமும் உள்ளது. அதன் ஊழியர்கள் தங்களது வியாபாரம் பாதிப்படைவதாக கூறி தங்களை வெளியே அனுப்பி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.