நடிகர் சூர்யா தனது 44ஆவது படத்துக்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜூடன் இணைந்திருக்கிறார். இதில் நடிகை பூஜா ஹெக்டே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்தமான், ஊட்டி, சென்னை உள்ளிட்டப் பல பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. ஊட்டியில் ஆக்ஷன் சீக்வன்ஸூடன் படப்பிடிப்பு தொடங்கியது. அதில் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சிகளில் சூர்யாவுக்கு சிறு விபத்து ஏற்பட்டது நினைவிருக்கலாம். படத்தில் இருந்து வெளியான சூர்யாவின் அறிமுக கதாபாத்திர வீடியோவில் அவரின் ரெட்ரோ லுக் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது என சொல்லலாம்.
இந்த நிலையில், ‘சூர்யா 44’ படப்பிடிப்பு முடித்துவிட்டதாக சூர்யா தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அதில், ‘'பல்வேறு இடங்களில் மிகவும் மகிழ்ச்சியாக படமாக்கப்பட்ட படப்பிடிப்பு இது. திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் வேலைப் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. என் வாழ்நாள் முழுவதும் உடன் பயணிக்கும் சகோதரராக கார்த்திக் சுப்பராஜ் கிடைத்திருக்கிறார். ’சூர்யா 44’ படத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியதற்கு நன்றி!'’ எனத் தெரிவித்திருக்கிறார்.