தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார். இதற்கான ஏற்பாடுகள் இன்று காலை முதலே பனையூரில் உள்ள விஜய் அலுவகலத்தில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. விஜயின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். இதுமட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் இருந்து 250 முக்கிய மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
தன் பெற்றோரிடம் ஆசி வாங்கி விஜய் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கட்சியின் உறுதி மொழியை வாசித்தார். பின்பு கொடியை அறிமுகம் செய்து வைத்தார். மேலே, கீழே சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சள் நிறமும் இருக்கும்படி கொடியின் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. நடுவில் வெற்றியை குறிக்கும் வாகை மலரும் அதைச் சுற்றி நட்சத்திரங்களும் இருந்தது. வாகை மலரின் இருபக்கத்திலும் பிளிறும் யானைகள் இருந்தது.
கட்சிக்கான பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது. பாடலை விவேக் எழுதியிருக்க, தமன் இசையமைத்திருக்கிறார். கொடி அறிமுகம் செய்து வைத்த பின்பு விஜய் பேசியதாவது, “இன்று நமக்கு சந்தோஷமான நாள். என்னுடைய அரசியல் பயணத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி கட்சியை அறிவித்தேன். நம் கட்சியின் முதல் மாநில மாநாடு விரைவில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக நீங்கள் எல்லோரும் மகிழ்ந்த் கொண்டாட நம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்துள்ளேன். என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் உங்கள் எல்லோர் முன்னிலையிலும் இந்தக் கொடியை அறிமுகம் செய்ததில் பெருமை கொள்கிறேன். இவ்வளவு நாட்கள் நாம் நமக்காக உழைத்தோம். ஆனால், வரும் காலத்தில் நாம் தமிழக மக்களின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.
புயலுக்குப் பின் அமைதி என்பதுபோல நம் கட்சிக் கொடிக்குப் பின்பும் சுவாரஸ்யமான வரலாற்று குறிப்பு ஒன்று உள்ளது. அதை நம் மாநில கட்சி மாநாட்டில் நம் கொள்கைகளோடு சேர்ந்து சொல்வேன். அது வரை, இந்த நிகழ்வை கெத்தா, சந்தோஷமாக கொண்டாடுவோம். இதை நம் கட்சிக்கான கொடியாக மட்டும் பார்க்கவில்லை. வருங்கால தமிழக தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக இதைப் பார்க்கிறேன். இந்தக் கொடியை உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் சொல்லாமல் ஏற்றுவீர்கள் என எனக்குத் தெரியும். அதற்கான முறையான அனுமதி வாங்கி செய்யுங்கள். நம்பிக்கையாக இருங்கள். வெற்றி நிச்சயம்!” என்றார்.