‘GOAT’ படத்தை அடுத்து நடிகர் விஜய் தனது கடைசிப் படமாக ‘தளபதி 69’ அறிவித்திருக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். நேற்று விஜய் சினிமாவை விட்டு விலகுவது வருத்தமளிப்பதாகவும் அவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம் என்பது பற்றியும் ரசிகர்கள் உணர்ச்சிப்பூர்வமாக பேசும் வீடியோ ஒன்றை படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வெளியிட்டிருந்தது.
இப்போது ‘தளபதி 69’ படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளிவந்துள்ளது. இந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த வருடம் அக்டோபரில் படம் வெளியாகிறது.
இதுவரை விஜயின் படங்களில் இல்லாத வகையில் வித்தியாசமாக இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீலநிறப் பின்னணியில் கையில் தீப்பந்தம் ஏந்தியிருக்கும்படியும் ‘ஜனநாயகத்தின் ஒளியை ஏற்றுபவர் விரைவில் வருகிறார்’ என்ற கேப்ஷனும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நீலநிற பின்னணியில் பிள்ளையார் உருவமும் மறைமுகமாக உள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ‘சமீபத்தில் விஜய் பிள்ளையார் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என்ற சர்ச்சைக்கு பதிலடிதான் இது’ என்று கூறி வருகின்றனர்.
ஒருசிலர், தேமுதிக கொடியில் இடம்பெற்றிருக்கும் தீப்பந்தத்தோடு இதை ஒப்பிட்டு வருகின்றனர். இந்தப் படத்தை அடுத்து விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட இருப்பதால், அதனை ஒட்டியே இந்தக் கதை இருக்கும் எனவும் அதைத் தான் இந்த கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்கள் என்றும் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். இதோடு, ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட கதைதான் இது என்ற தகவலும் உலா வருகிறது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இந்தப் படம் மீது இருப்பது குறிப்பிடத்தக்கது.