பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் இன்று ‘தங்கலான்’ படம் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், திருச்சியில் இந்தப் படத்தைப் பார்க்க சென்ற விக்ரம் ரசிகர்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதாவது, தங்களின் விருப்பமான கதாநாயகன் படத்தைப் பார்க்க வரும்போது ரசிகர்கள் படத்தில் அவர்களின் கெட்டப்பிலேயே வருவது வழக்கமான ஒன்றுதான். அதையே ‘தங்கலான்’ படத்திற்காக விக்ரம் ரசிகர்கள் செய்திருக்கிறார்கள்.
படத்தில் நடிகர் விக்ரம் கையில் ஒரு குச்சியுடன், கோவணம் மட்டுமே அணிந்து மேலாடை எதுவும் இல்லாமல் இருப்பார். அப்படியான கெட்டப்பில் திருச்சியில் உள்ள எல்.ஏ. திரையரங்கிற்கு ரசிகர்கள் வந்திருக்கிறார்கள். இதனால், திரையரங்க வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களை திரையரங்க நிர்வாகிகள் தடுத்திருக்கிறார்கள். இருதரப்பிற்கு வாக்குவாதம் ஏற்பட்ட பின்பு, ஒருக்கட்டத்தில் அவர்களை திரையரங்கிற்குள் அனுமதித்திருக்கின்றனர்.