பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ படம் நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது, அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் நிலுவை வைத்திருந்திருக்கிறார் ‘தங்கலான்’ தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. பணத்தைத் திருப்பி தர வேண்டும் என அர்ஜூன்லால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை, உயர்நீதிமன்றம் ‘தங்கலான்’ படம் வெளியாவதற்கு முன்பு ரூ. 1 கோடி கொடுக்க வேண்டும் எனவும், அப்படி இல்லை என்றால் படம் திட்டமிட்டபடி வெளியாகாது என்றும் உத்தரவு பிறப்பித்தார்கள்.
‘தங்கலான்’ படத்திற்காக செய்த புரோமோஷன், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எல்லாம் வீணாகி விடக் கூடாது என்பதற்காக நீதிமன்ற உத்தரவுப்படி ரூ. 1 கோடி பணத்தை டெபாசிட் செய்திருக்கிறார் ஞானவேல்ராஜா. இதனால், ‘தங்கலான்’ படத்திற்கு இருந்த தடை நீக்கப்பட்டு, திட்டமிட்டபடி நாளை படம் வெளியாகிறது. இதனால், விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.