கோலார் தங்கவயல் பகுதியில் இருக்கும் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய கதையாக ‘தங்கலான்’ வரவிருக்கிறது. மேலும், இந்தப் படத்தை ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பவும் திட்டமிட்டு இருப்பதாகப் படக்குழு தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், படத்திற்கு திரைத்துறையினர் பலரும் தங்கள் வாழ்த்துகளைக் கூறி இருக்கின்றனர்.
நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில், ‘’தங்கலான்’ திரைப்படம் நிச்சயம் மிகப்பெரியதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை'' எனக் கூறியிருக்கிறார். நடிகர் தனுஷ், ''தான் எடுத்துக் கொள்ளும் கதாபாத்திரத்திற்காகத் தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொள்ளும் நடிகர்களில் சியான் விக்ரம் சாரும் ஒருவர். அவருடைய ‘தங்கலான்’ படத்திற்கும் படக்குழுவுக்கும் வாழ்த்துகள்!'’ என வாழ்த்தியுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ், ''விக்ரம் சாரின் ‘தங்கலான்’ படத்துடன் என்னுடைய ‘ரகு தாத்தா’ படமும் வெளியாவது எனக்கு பெருமை. விக்ரம் சாரின் ‘அந்நியன்’ பட போஸ்டர்கள் எல்லாம் என்னுடைய ஸ்டடி டேபிளில் வைத்திருப்பேன். விக்ரம் சார், மாளவிகா, பார்வதி என ‘தங்கலான்’ படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!'’ எனக் கூறியிருக்கிறார்.
தயாரிப்பாளர், இயக்குநர் சுரேஷ் காமாட்சி, ''மண் சார்ந்த கதைகள் சினிமாவாகும் போதுதான் உலக அரங்குகளில் நம் மண்பெருமையும், வாழ்வியலும் பதிவாகும். சிறந்த திறன் மிகு கலைஞர்கள் உலகம் முழுக்க பயணிக்க ஏதுவாக அமையும். அவ்வாறாக மண்சார்ந்து இழப்பைச் சந்தித்த நிகழ்வுகளைத் தாங்கி வரும் படம் தங்கலான். சிறந்த படைப்புகள் தங்களைத் தாங்களே மக்களிடம் சென்று சேர்ந்துவிடும். மக்களின் வாழ்வியலை பெருவலியோடு சொல்லிவரும் இயக்குநர் ரஞ்சித்திற்கு வாழ்த்துகள்'’ என்று கூறியிருக்கிறார்.