சினிமா

’நீதான் என் எல்லாமே’; நடிகர்கள் அதிதி- சித்தார்த் திருமணம்!

நடிகர்கள் சித்தார்த் மற்றும் அதிதி இருவரின் திருமணம் முடிந்துள்ளது. இந்தக் காதல் தம்பதிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Aathira

நடிகர்கள் சித்தார்த் மற்றும் அதிதி இருவருக்கும் இந்த வருடம் மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் தெலுங்கானாவில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். இதனை நிச்சயதார்த்த மோதிரத்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அதிதி-சித்தார்த் இருவரும் உறுதிப்படுத்தினார்கள். மேலும், விருது விழா மேடை ஒன்றில் தனது நிச்சயதார்த்தம் பற்றி பேசிய சித்தார்த், ரகசியமாக தங்கள் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை, தனிப்பட்ட முறையில் நடந்தது எனத் தெளிவுப்படுத்தினார்.

ஆனால், திருமணம் எப்போது என்பது பற்றி இருவரும் வாய் திறக்கவில்லை. திருமண தேதியை ரகசியமாகவே வைத்திருந்த இந்த ஜோடி இப்போது தங்களுக்குத் திருமணம் முடிந்துள்ளது என்பதை அறிவித்திருக்கிறார்கள். நிச்சயதார்த்தம் போலவே திருமணமும் உறவினர்கள், நண்பர்கள் சூழ கோயிலில் எளிமையாக நடந்து முடிந்திருக்கிறது. ‘என் சூரியன், நிலவு, நட்சத்திரம் எல்லாமே இனி நீதான். முடிவில்லாத காதலும் அன்பும், சிரிப்பும் தொடங்கியுள்ளது’ என்ற அழகான கேப்ஷனையும் இந்த ஜோடி தங்கள் திருமணப் புகைப்படங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.