நடிகர் சூர்யா ‘கங்குவா’ படத்தை முடித்துவிட்டு தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் ஷெட்யூல் அந்தமானில் நடந்தது. கிட்டத்தட்ட ஒருமாத கால அளவில் அங்கு நடந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் சில முக்கிய போர்ஷனும் படமாக்கப்பட்டிருக்கிறது.
நடிகை பூஜா ஹெக்டேவும் அந்தமான் போர்ஷனில் கலந்து கொண்டிருக்கிறார். அந்தமானைத் தொடர்ந்து ஊட்டி, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவுக்கு சிறு விபத்து ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
கார்த்திக் சுப்பராஜின் ஹீரோக்கள் போலவே இந்தப் படத்திலும் சூர்யா ரெட்ரோ ஸ்டைல் தோற்றத்தில் அசத்தலாக வருகிறார் என்பது சமீபத்திய புரோமோ போஸ்டர்கள் மற்றும் வீடியோக்கள் பார்த்தபோது தெரிந்தது. இந்தப் படத்தில்தான் நடிகை நந்திதா தாஸ் இணைந்திருக்கிறார். இவருக்கான போர்ஷன் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. ‘தமிழில் கடைசியாக அவர் ‘நீர்ப்பறவை’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு, கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து தமிழுக்கு ‘சூர்யா 44’ மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்து படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.