நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022-ம் ஆண்டு நடந்தது. முதலில் இவர்களது திருமணம் திருப்பதியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில பிரச்னைகள் காரணமாக மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட் ஒன்றில் நடந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லி என இந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இவர்களது திருமண வீடியோ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வீடியோ வெளியாகவில்லை. இந்த ஜோடிக்கு வாடகைதாய் மூலம் உயிர் - உலக் என்ற இரு குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு சமீபத்தில் இரண்டாவது பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இப்போது அவர்களது திருமண வீடியோ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த மாதம் தீபாவளி அன்று வெளியாகும் என தகவல் வந்துள்ளது. ஏன் இவ்வளவு நாட்கள் தாமதம் என்ற காரணமும் வெளியாகியுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்கான நயன் - விக்னேஷ் சிவனின் திருமண வீடியோவை இயக்குநர் கெளதம் மேனன் தான் இயக்கினார். இந்த வீடியோவில் ‘நானும் ரெளடிதான்’ படத்தின் மேக்கிங் வீடியோக்கள், செட்டில் விக்னேஷ் சிவன் - நயன்தாராவுக்கு இடையே நிகழ்ந்த சந்திப்புகள் என சில காட்சிகள் இடம்பெற்றிருக்கிறதாம். 'நானும் ரவுடிதான்' படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ். அவர் நானும் ரவுடிதான் காட்சிகளைப் பயன்படுத்துவதற்கு ‘நோ அப்ஜெக்ஷன்’ வாங்குவதில்தான் இத்தனை காலதாமதம் ஏற்பட்டதாம்.
நானும் ரவுடிதான் ரிலீஸ் சமயத்தில் நயன்தாராவுக்கும், தனுஷுக்கும் இடையே கருத்து மோதல்கள் நடந்தது. சம்பளம் தொடங்கி பல விஷயங்களில் நயன்தாரா தனுஷிடம் கறாராக நடந்ததாகச் சொல்லப்பட்டது. இதனால் தனுஷ் இந்த திருமண வீடியோவுக்கு நோ அப்ஜக்ஷன் சர்ட்டிஃபிகேட் தருவதற்கு இழுத்தடித்தார் எனச் சொல்லப்படுகிறது.