மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி மளையால திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை பற்றி கூறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ‘அம்மா’ அமைப்பின் தலைவர் மோகன்லால் அமைதி காப்பதாக விமர்சனம் எழுந்த நிலையில், தனது தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்தார்.
அம்மா (AMMA) அமைப்பு நிர்வாகிகள் ராஜினாமா செய்ததை குறித்து கருத்து தெரிவித்த நடிகை பார்வதி திருவோத்து, “இந்த செய்தியை கேள்விப்பட்ட உடனே என் மனதிற்கு முதலில் தோன்றியது, ‘இது எவ்வளவு கோழைத்தனமான செயல்?’ என்பதுதான். நடிகைகள் எதிர்கொள்ளூம் பாலியல் துன்புறுத்தலை குறித்து விளக்க அளிக்க வேண்டிய இடத்தில் இருக்கும் இவர்கள் எப்படி கோழைத்தனமாக பதவியில் இருந்து விலகலாம்?'' என்று விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் அவர், ''ஒருவேளை பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை கூறினால், அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதன் பிறகு, அவர்களின் கரியர் மற்றும் வாழ்க்கை என்னாவது? கோர்ட் செலவு, மனநல பிரச்சினைகள் இதைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை” என்று பார்வதி கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.