இந்தியத் திரையுலகில் ஹேமா கமிட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக நடிகை ராதிகா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில், மலையாளத் திரைப்படத்தில் தான் நடித்த போது அங்கிருந்த கேரவேனில் ரகசிய கேமராக்கள் வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை அங்கிருந்தவர்கள் பார்த்தார்கள் எனச் சொன்னார்.
இதுதொடர்பாக கேரள சிறப்பு விசாரணை குழுவினர் தொலைபேசி மூலம் அவரைத் தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் தகவல் வெளியானது. இதுதொடர்பாக நடிகை ராதிகா இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். “ரகசிய கேமரா குறித்து என்னிடம் தெளிவு பெறுவதற்காக தொடர்பு கொண்டு பேசினார்கள். எந்தப் படப்பிடிப்பு, யார் நடிகர்கள் என சொல்வது நம்மை நாமே துப்புக் கொள்வதற்கு சமம்.
ஹேமா கமிட்டி அமைக்க வேண்டிய அளவுக்கு தமிழில் அக்கிரமங்கள் நடக்கிறதா என்று கேட்கிறார்கள். இரண்டாம் நிலை கேரக்டர் ஆர்டிஸ்ட்களுக்கும் நாம் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இன்று நிறைய படித்தவர்களும் தைரியமானவர்களும் இந்தத் துறையில் இருக்கிறார்கள். சினிமாத் துறை மாறிவிட்டது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். ரகசிய கேமரா குறித்து ஏன் அப்போதே சொல்லவில்லை எனக் கேட்கிறார்கள். அந்த சமயத்தில் என்னால் முடிந்ததை நான் செய்தேன்.
இதுபோன்ற பிரச்சனைகளில் பெண்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். உடனே சொல்லாதது குற்றம் கிடையாது. மோகன்லால் சார், “என் செட்டில் நடந்ததா?” என்று கேட்டார். நான் பெயர் சொல்ல விரும்பவில்லை என்று அவரிடம் சொல்லி விட்டேன். கோலிவுட்டிலும் ஹேமா கமிட்டி போல ஒரு கமிட்டி அமையும் என்றால் நடிகர் விஷாலுக்கு அறிவுரை தரத் தயார்” என்றார்.