கேரள சினிமாத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அவர்கள் மீது பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றன என்றும் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. இது கடந்த சில வாரங்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருவருகிறதுகிறது. குறிப்பாக, பாதிக்கப்பட்ட பல நடிகைகள் வெளிப்படையாகவே நடிகர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக திரைத்துறையில் உள்ள பல நடிகர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். மலையாள நடிகர்கள் அமைப்பான ‘அம்மா’வின் தலைவர் பொறுப்பில் இருந்து மோகன்லால் உட்பட 16 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். பொறுப்பை தட்டி கழிக்கும் கோழைத்தனமான செயல் இது என நடிகை பார்வதி கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், நடிகை சமந்தாவும் இதுபற்றி பேசியிருக்கிறார். அதாவது, கேரளத் திரையுலகைப் போலவே தெலுங்கு திரையுலகிலும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்கள் பற்றி பேச வேண்டும் எனக் கூறியிருக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு ‘தி வாய்ஸ் ஆஃப் உமன்’ என்ற அமைப்பு தெலுங்கு சினிமாவின் துணை அமைப்பாக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை வெளிப்படையாக சொல்ல வேண்டும். அப்போதுதான் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என சமந்தா கூறியிருக்கிறார்.