நேற்று நடந்த ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேன் இருவரும் மோதினர். இதில் வினேஷ் சிறப்பாக விளையாடி யூஸ்னிலிஸ் குஸ்மேனை தோற்கடித்து வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். அதோடு, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இந்த நிலையில், இன்று 50 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் வினேஷ் போகத்துக்கு எடை பரிசோதித்த போது நிர்ணயித்ததை விட கூடுதலாக அதாவது, 50 கிலோ 100 கிராம் எடை இருந்தது. இதனால், வினேஷ் போகத் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய பிரதமர் மோடி உட்பட பலரும் வினேஷூக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
நடிகை சமந்தாவும் வினேஷூக்கு ஆறுதல் கூறி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ’உறுதியான நபர்களுக்கு இதுபோன்ற கடினமான சமயங்கள் வரும். நீங்கள் தனியாக இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதைவிட பெரும் சக்தி உங்களைக் கவனிக்கிறது. பல சிரமங்களுக்கு மத்தியிலும் தனித்து இருக்கு உங்கள் வலிமை மிகப்பெரியது’ என்று கூறியிருக்கிறார்.