பாலிவுட்டில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் கோவிந்தா. 61 வயதாகும் இவர் அரசியலிலும் ஆர்வம் கொண்டு சிவசேனா கட்சியிலும் உள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை 4.45 மணியளவில் அவர் தனது வீட்டில் இருந்து கொல்கத்தாவிற்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை தன்னுடன் கொண்டு செல்ல எடுத்து வைத்தபோது அவரது கையில் இருந்து தவறுதலாக துப்பாக்கி கீழே விழுந்திருக்கிறது. இதனால், திடீரென வெடித்த துப்பாக்கியால் அவரது காலில் குண்டு துளைத்திருக்கிறது. ரத்தம் சொட்ட சொட்ட வலியால் துடித்தவரை அவரது வீட்டில் இருந்த உறவினர்கள் உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்திருக்கின்றனர்.
இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் காலில் இருந்த குண்டை நீக்கியுள்ளனர். இப்போது நடிகர் கோவிந்தா நலமுடன் உள்ளார் என அவரது மேலாளர் சாஷி சின்ஹா ஊடகங்களில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அவர் தற்கொலைக்கு முயன்றாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு இது தவறுதலாகவே நடந்தது என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளனர். கோவிந்தா விரைவில் உடல்நலன் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்களும் திரையுலகினரும் தங்கள் பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.