ஐந்தாம் வேதம் - Aindham Vedham 
சினிமா விமர்சனம்

மர்ம தேசத்தால் பிரமிக்க வைத்த நாகாவின் 'ஐந்தாம் வேதம்' வெப் சீரிஸ்… வொர்த் வாட்ச்சிங்கா?!

இயக்குநர் நாகாவின் இயக்கத்தில் ‘ஐந்தாம் வேதம்’ என்றொரு வெப்சீரிஸ் வெளியாகியிருக்கிறது (Zee5). இந்த முதல் பாகத்தில் மொத்தம் எட்டு எபிசோடுகள் இருக்கின்றன. நாகாவின் பிரத்யேகமான பாணியில் புராணம், ஐதீகம், நவீனம், அறிவியல் என்று வசீகரமான கலவையில் இந்தத் தொடர் அற்புதமாக உருவாகியிருக்கிறது.

Suresh Kannan

இயக்குநர் நாகாவை ‘சின்னத் திரையின் மணிரத்னம்’ என்று சொல்லலாம். பெரும்பாலான டிவி தொடர்கள் இன்றளவும் கூட கண்ணைக் கசக்கிக் கொண்டு நம் வீட்டு வரவேற்பறையில் தினமும் ஒப்பாரி ராகம் பாடிக் கொண்டிருக்கும் சூழலில்,  தொன்னூறுகளிலேயே ‘மர்மதேசம்’ என்கிற தலைப்பில் அட்டகாசமான மிஸ்டரி தொடர்களை இயக்கியவர் நாகா. அந்தக் காலக்கட்டத்தில் இந்தத் தொடர்களைப் பார்த்தவர்கள் ‘’ச்சே.. இப்ப வர்ற வெப்சீரிஸ்கள் கூட அந்த ரேஞ்சை தொட முடியாது’’ என்று இனிமையாக நினைவுகூரும் அளவுக்கு ‘மர்மதேசம்’ பல பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அந்த அளவிற்கு ஒரு பென்ச்மார்க் அடையாளமாக ‘மர்மதேசம்’ இன்றளவும் இருக்கிறது.

புராணம், மர்மம், தொன்மம், அமானுஷ்யம், நவீனம், ஃபேன்டஸி, ரியாலிட்டி போன்றவற்றை ஒரு வசீகரமான கலவையில் கலந்து சுவாரசியமான படைப்புகளைத் தரக்கூடியவர் இயக்குநர் நாகா. மேக்கிங் முதற்கொண்டு ஒவ்வொரு எபிசோடிலும் இந்தக் குழுவின் அசுரத்தனமான உழைப்பைக் காண முடியும். நாகாவால் மிஸ்டரி தொடர்களைத்தான் தர முடியுமா என்றால் இல்லை. இதன் எதிர்முனையில் ‘ரமணி vs ரமணி’ என்கிற நகைச்சுவைத் தொடரையும் அவரால் தர முடிந்தது. நடுத்தர வர்க்க மனிதர்களின் அசட்டுத்தனமான குணாதிசயங்களை இந்தத் தொடர் சிரிக்கச் சிரிக்க பதிவு செய்தது.

‘ஆனந்தபுரத்து வீடு’ என்கிற திரைப்படத்தை இயக்கியிருக்கும் நாகா, சமீபத்தில் ‘தலைவெட்டியான் பாளையம்’ என்கிற இணையத் தொடரையும் உருவாக்கியிருந்தார். ‘பஞ்சாயத்’ என்கிற பிரபலமான இந்தித் தொடரின் தமிழாக்கம் இது.

Aindham Vedham

பழைமையும் நவீனமும் கலவையாக பயணிக்கும் தொடர் -  ஐந்தாம் வேதம்

ஓகே.. இதெல்லாம் இப்போது எதற்காக என்றால், இயக்குநர் நாகாவின் இயக்கத்தில் ‘ஐந்தாம் வேதம்’ என்றொரு வெப்சீரிஸ் வெளியாகியிருக்கிறது (Zee5). இந்த முதல் பாகத்தில் மொத்தம் எட்டு எபிசோடுகள் இருக்கின்றன. நாகாவின் பிரத்யேகமான பாணியில் புராணம், ஐதீகம், நவீனம், அறிவியல் என்று வசீகரமான கலவையில் இந்தத் தொடர் அற்புதமாக உருவாகியிருக்கிறது.

இதுவரை தமிழில் வெளியாகியிருக்கும் வெப்சீரிஸ்களின் தரமான படைப்புகளின் வரிசையில் ‘ஐந்தாம் வேதம்’ நிச்சயமாக இடம் பெறும். ஒரு திரைப்படத்திற்கான உழைப்பையும், மெனக்கெடலையும் திறமையையும் இந்தத் தொடரில் வஞ்சனையில்லாமல் கொட்டியிருக்கிறார்கள். அற்புதமான டிரோன் ஷாட்களில் நிலப்பரப்புகளின் விஸ்தீரணத்தை பதிவாக்கியிருக்கும் கேமரா, மர்மமான காட்சிகளின் பரபரப்பையும் கச்சிதமாக கைப்பற்றியிருக்கிறது.

குறிப்பாக ஆர்ட் டிபார்ட்மென்ட்டின் உழைப்பை சொல்லியேயாக வேண்டும். பழமை, புதுமை என்று இரண்டு முனைகளுக்குத் தொடர்பான கலைப்பொருட்கள், அரங்குகள் போன்றவற்றை சிரத்தையுடன் உருவாக்கி பிரமிக்க வைத்திருக்கிறார்கள்.

சாய் தன்ஷிகா, ஒய்.ஜி.மகேந்திரா, ராம்ஜி, தேவதர்ஷனி, பொன்வண்ணன், விவேக் ராஜகோபால், சண்முகராஜா உள்ளிட்ட பல நடிகர்களின் பங்களிப்பில் இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

சாய் தன்ஷிகா

ஐந்தாம் வேதம் வெப் சீரிஸ் எதைப் பற்றியது?

1972-ம் ஆண்டு, மதுரை மாவட்டத்தின் அருகே ஒரு அகழ்வாராய்ச்சி இடத்திற்கு அருகே இந்தத் தொடர் தொடங்குகிறது. அங்கு கிடைக்கும் ஒரு பழங்கால குறிப்பில், சுக்கிரன், குரு, சனி, செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்களும் சூரியனை நோக்கி ஒரு நேர்க்கோட்டுப் பாதையில் அமையும் என்றும் ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் இந்த அரிய சம்பவத்தின் போது ஒரு அதிசயம் உருவாகும் என்றும் சங்கேத மொழியில் எழுதப்பட்டிருக்கிறது.

‘நான்கு ஐந்தாகும்’ என்கிற படக்குறிப்புகளின் மூலம் நான்கு வேதங்களைத் தாண்டி ஐந்தாம் வேதம் வெளியாகும் என்று அந்தக் குறிப்பு ஆருடம் சொல்கிறது. ‘’இன்னமும் 50 வருடங்களில் அந்த அதிசயம் நடக்கக்கூடும்’’ என்று ஆராய்ச்சியாளர் சொல்கிறார்.

ஐந்தாம் வேதம் வெளியாகும் என்று யூகிக்கப்பட்ட நாளின் முன்னும் பின்னுமாக இந்தத் தொடர் பல கோணங்களில் இயங்குகிறது. ‘அயங்காரபுரம்’ என்னும் ஊர் இந்தக் களத்தின் மையமாக இருக்கிறது. நாட்டின் பல திசைகளில் இருக்கும் இந்த மனிதர்கள் இந்த ஊருக்கு திட்டமிட்டோ, தன்னிச்சையாகவோ வந்து சேர்கிறார்கள். அதற்குள் மர்மமான முறையில் பல விஷயங்கள் நடக்கின்றன. சில மரணங்கள் நிகழ்கின்றன. சில ரகசியங்கள் வெளிப்படுகின்றன. பிறகு என்னவாயிற்று? ஐந்தாம் வேதம் வெளிப்பட்டதா?

தடைபடும் பயணம் - ஒளிந்திருக்கும் மர்மம்

இந்தத் தொடரின் பிரதான பாத்திரங்களுள் ஒன்று அனு. (சாய் தன்ஷிகா). வாரணாசியில் தன் தாய்க்கு இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு அவள் உடனே பாண்டிச்சேரிக்கு சென்றாக வேண்டும். பாடகியான அவளுக்கு ஒரு முக்கியமான அப்பாயிண்ட்மென்ட் இருக்கிறது. பாண்டிச்சேரிக்கு அவசரமாக கிளம்பும் போது, அவள் தங்கியிருக்கும் விடுதியின் உரிமையாளரான ஒரு பண்டிதர் அனுவை அழைத்து ஒரு பழங்கால பெட்டியை ஒப்படைக்கிறார்.

‘‘தென்னிந்தியாவில் உள்ள அயங்காரபுரம் என்னும் கிராமத்தில் உள்ள கோயிலில் இந்தப் பெட்டியை ஒப்படைப்பது உன் கடமை. அதுதான் உனக்கு எழுதப்பட்டிருக்கும் விதி. இதை உன்னிடம் ஒப்படைப்பது என்னுடைய விதி” என்று பண்டிதர் சொல்ல ‘வாட் நான்சென்ஸ்! என்கிற மாதிரி அனு அதை மறுக்க, உடனே நிகழும் விபத்தில் பண்டிதர் இறந்து போகிறார்.

Aindham Vedham

அதிர்ச்சியடையும் அனு அங்கிருந்து கிளம்புவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோல்வியடைகின்றன. வழியில் தோன்றும் ஒரு சித்தர் “நீ அயங்காரபுரம் போ. வேறு எங்கும் உன்னால் போக முடியாது” என்று சொல்ல அனுவால் அதை நம்ப முடியவில்லை. விதியால் செலுத்தப்பட்டது போல் அயங்காரபுரம் கோவிலுக்கு செல்லும் அனு அங்கேயே தங்க நேரிடுகிறது. பிறகு முன்னும் பின்னுமாக நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் இந்தத் தொடர்.

பல்வேறு பாத்திரங்கள், பயணங்கள் -  அனைத்தையும் இணைக்கும் ஒரு களம்!

A.I. App மூலம் ஒரு வீடியோ பெண்ணுடன் சரசமாடிக் கொண்டிருக்கும் ஹை-டெக் இளைஞன், தான் எழுதிய பழைய கதையைத் தேடிக் கொண்டிருக்கும்  ஓர் எழுத்தாளர், திருமண தோஷத்திற்கான பரிகாரம் தேடி வரும் தந்தை மற்றும் அவரது மகள், பேராசை பிடித்த ஒரு பெண் வழக்கறிஞர் மற்றும் அவருடைய உதவியாளர், கோயில் சிற்பம் பற்றி ஆவணப்படம் உருவாக்கும் இயக்குநர், அமெரிக்காவில் இருந்து திரும்பும் ஊர்ப் பிரமுகரின் தம்பி, பிரம்மனின் சன்னதி இந்தக் கோவிலுக்குள் எங்கோ மறைந்திருக்கிறது என்று நம்பும் ருத்ராபதி பெரியவர் என்று பல திசைகளில் இருக்கும் அனைவரையும் இணைக்கும் மையம் - அயங்காரபுரம் கோவில்.

புராணம், ஐதீகம், கோவில், சிற்பம், பழங்காலகுறிப்புகள் என்று தொன்மத்தின் அடையாளங்களை திரைக்கதையில் பொருத்தியிருக்கும் இயக்குநர், அதன் எதிர்முனையில் நவீன அறிவியல் சமாச்சாரங்களையும் பயன்படுத்தியிருப்பது இந்தத் தொடரின் சுவாரசியத்தைக் கூட்டுகிறது. 3D அச்சு இயந்திரத்தின் மூலம் மாமிசத்தை பிரின்ட் செய்ய முடியும் என்கிற அதி கற்பனை, அதைக் கைப்பற்ற முயலும் மீட் மாஃபியாவின் இண்டர்நேஷனல் சதிகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் முதற்கொண்டு பிரான்ஸ் உள்ளிட்ட அயல்நாடுகளிலும் இதன் கதைப் பின்னணி விரிகிறது.

ஏகப்பட்ட பாத்திரங்கள், லேயர்கள், நான்லீனியர் நரேஷன் போன்றவற்றின் மூலம் இந்தத் தொடரை புதுமையாகவும் சுவாரசியமாகவும் உருவாக்க இயக்குநர் மிகவும் மெனக்கெட்டிருப்பதை உணர முடிகிறது. தொடரின் ஆரம்ப இரண்டு எபிசோடுகள் தீயாகப் பயணித்து ஆவலைக் கூட்டுகின்றன. ஆனால் அதற்குப் பிறகு இணையும் பல்வேறு பாத்திரங்கள், இழைகள் ஆகியவை கூடிக் கூடி ஒருவிதமான குழப்பத்தையும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது.

Aindham Vedham

கிராமத்துக் கோவிலில் நடக்கும் குழப்பங்களினால் அங்கிருந்து எப்படியாவது விலக வேண்டும் என்று அனு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் ‘விநோதமான சக்தி’யால் தடுக்கப்படும் காட்சிகள் சுவாரசியமாக இருக்கின்றன். மதுரை ரயில் நிலையத்தை நோக்கி  பைக்கில் பயணப்படும் அனு, நீண்ட தூரம் பயணித்தாலும் கூட ஒரே பாதையில் சுற்றிச் சுற்றி வருவதை குழப்பத்துடன் உணர்கிறாள். ஒரு கட்டத்தில் இந்தத் தொடரும் அதே மாதிரியான குழப்பத்தைத்தான் அளிக்கிறது. ஐந்தாம் வேதம், பிரம்மனின் சன்னதி மர்மம், ஐந்தாவது தலையின் பூடகம் போன்ற விஷயங்கள் திரும்பத் திரும்ப சொல்லப்படும் போது நமக்கிருக்கும் ஒரே தலை பயங்கரமாக சுற்றுகிறது.

மிர்ச்சி சிவா நடித்த ‘தமிழப்படத்தில்’ ஒரு நகைச்சுவைக் காட்சி வரும். வறுமையான தோற்றத்தை வெளியில் கொண்டிருக்கும் ஒரு வீட்டிற்குள் தன் பாட்டியுடன் நுழைவார் ஹீரோ. ஆனால் வீட்டிற்குள் அதிநவீனமான அலங்காரம், ஹைடெக் பொருட்கள் என்று வசதியாக இருக்கும். ‘‘பிரேக் பாஸ்டிற்கு சிம்ப்பிளா பிட்சாவும் மில்க் ஷேக்கும் பண்ணிடு பாட்டி’’ என்பார் ஹீரோ. அதைப் போலவே தங்குவதற்கு லாட்ஜ், சாப்பிடுவதற்கு ஹோட்டல் கூட இல்லாத பழமையான அயங்காரபுரம் கிராமத்திற்குள் நவீன கெஸ்ட் அவுஸ், ஹைடெக் சமாச்சாரங்கள் கொண்ட இடம் போன்றவை இருப்பது முரணாக இருக்கிறது.

பிரதான பாத்திரங்களில் ஒன்றான அனுவாக சாய் தன்ஷிகா நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார். சுதந்திர மனோபாவமுள்ள ஒரு நவீனதலைமுறைப் பெண் பழமையான நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்குள் சிக்கிக் கொண்டு தத்தளிப்பதை சிறப்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தக் கதையின் ஒரு முக்கியமான சாவியாக அவள் இருப்பது கிளைமாக்ஸ் காட்சியில் வெளிப்படுவது சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. சித்தராக வரும் ராம்ஜியின் நடிப்பும் அருமை. தேவதர்ஷினியை பெரும்பாலும் அசட்டுத்தனமான நகைச்சுவையில் மட்டும்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இதில் முற்றிலும் வித்தியாசமான வழக்கறிஞர் பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

Aindham Vedham

மூடநம்பிக்கைக்கு ஆதரவளிக்காத தொன்மத்தின் பயணம்

வீடியோ பெண் பிம்பத்துடன் சரசமாடிக் கொண்டே இருக்கும் இளைஞனாக உற்சாகமான நடிப்பைத் தந்திருக்கிறார் விவேக் ராஜகோபால். இறுதியில் இவர் எடுக்கும் இன்னொரு உருவம் ஆச்சரியமளிக்கிறது. ‘பிரம்மனோட சன்னதி இங்கதான் இருக்கு’ என்று தீர்மானமாக நம்பும் பெரியவராக ஒய்.ஜி.மகேந்திராவின் நடிப்பு காட்சிகளின் நம்பகத்தன்மைக்கு உறுதுணையாக நிற்கிறது. அர்ச்சகரின் பெண்ணாக வருபவரின் நடிப்பும் இயல்பாக அமைந்திருக்கிறது.

நடிப்பு, தொழில்நுட்பம், திரைக்கதை, கலை இயக்கம், ஒளிப்பதிவு, வசனம், பின்னணி இசை, எடிட்டிங் என்று பல்வேறு ஏரியாக்களிலும் கலக்கியிருக்கும் இந்தத் தொடர், அநாவசியமான நீளத்தைக் குறைத்து ஆங்காங்கே திரைக்கதையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களையும் சீர் செய்திருந்தால் இன்னமும் சுவாரசியமான படைப்பாக மாறியிருக்கும்.

தொன்மங்களின் அடையாளங்களால் நிறைந்திருந்தாலும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பதே நாகாவின் ஸ்டைல். அந்தத் திசையில் பயணிக்கிறதோ என்கிற மயக்கத்தை ஏற்படுத்தி பிறகு பகுத்தறிவுப் பாதைக்கு திரும்பும் அவரது உத்தி இந்தத் தொடரிலும் சிறப்பாக பதிவாகியிருக்கிறது. ‘என்னதான் அறிவியல் நவீனமானாலும் மனித மூளையின் சிந்தனையை அவற்றால் ஒரு காலத்திலும் எட்ட முடியாது’ என்பது அறிவுஜீவிகளின் ஒரு தியரி. கிளைமாக்ஸ் காட்சியின் திருப்பங்கள் இந்த வாதத்திற்கு வலு சேர்க்கின்றன. நவீன டெக்னாலஜியால் கூட புரிந்து கொள்ள முடியாத சங்கேத மொழியை ஒரு special child சிறுவன் அநாயசமாக கண்டுபிடிப்பதை சித்தரிக்கும் காட்சிகள் அருமை.

ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் அனுபவத்திற்கு நிகராக நாகா இயக்கியிருக்கும் ‘ஐந்தாம் வேதம்’ தொடர், காண்பவர்களுக்கு நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.