Citadel: Honey Bunny 
சினிமா விமர்சனம்

Citadel: Honey Bunny : ‘பாட்ஷா’வாக மாறிய சமந்தா… ஹாலிவுட் படத்துக்கு இந்திய மசாலா ஓகேவா?!

Citadel என்பது நல்ல சக்தியைச் சேர்ந்த ஒரு குழு. உலகத்திலுள்ள தனிநபர் ரகசியங்கள், ஆயுதங்களைப் பற்றிய தகவல்கள் போன்றவற்றை நவீன நுட்பத்தின் மூலம் கைப்பற்றி உலகத்தையே ஆள முடியும் என்கிற வணிக நோக்கத்தோடு செயல்படும் குழுக்களை அழிப்பதற்காக Citadel போராடும். எழுத்தாளர் சுரேஷ் கண்ணனின் விமர்சனம் இங்கே!

Suresh Kannan

Citadel என்னும் தொலைக்காட்சித் தொடர்,   2023-ம் ஆண்டில் வெளியானது. இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் ஆகியோரின் நடிப்பில் வெளியான இந்த Spy Action Thriller Series மகத்தான வெற்றி பெற்றதால்  பல்வேறு மொழிகளில் இதன் spin off show திட்டமிடப்பட்டிருந்தது. அதன் படி இத்தாலி மொழி வெர்ஷனின் spin off கடந்த 2024 அக்டோபர் மாதம்  வெளியானது. (Citadel: Diana).

இப்போது இந்தி மொழியின் spin off (Citadel: Honey Bunny) 7 நவம்பர் 2024 அன்று அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. இந்தி நடிகர் வருண் தவான், கே.கே.மேனன்,  நம்மூர் சமந்தா, சிம்ரன், தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்த ஸ்பை ஆக்ஷன் எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம். 

பெரும்பாலான ஸ்பை ஆக்ஷன் திரைப்படங்களின் அடிப்படையே இதுதான். ஒட்டுமொத்த உலகத்தையே வசப்படுத்திக் கொள்ள நினைக்கும் அல்லது அழிக்கும் தீயநோக்கத்தோடு ஒரு குழு செயல்படும். அதைத் தடுக்கும் நல்ல நோக்கத்தோடு இன்னொரு குழு செயல்படும். சுருக்கமாகச் சொன்னால் நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் இடையிலான போர்தான் இதன் மையமாக இருக்கும். பெரும்பாலான ஜேம்ஸ்பாண்ட் படங்களின் அடிப்படையே இதுதான்.  

Citadel: Honey Bunny

பெண் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் உதாரணம்!

Citadel என்பது நல்ல சக்தியைச் சேர்ந்த ஒரு குழு. உலகத்திலுள்ள தனிநபர் ரகசியங்கள், ஆயுதங்களைப் பற்றிய தகவல்கள் போன்றவற்றை நவீன நுட்பத்தின் மூலம் கைப்பற்றி வருங்காலத்தில் உலகத்தையே ஆள முடியும் என்கிற வணிக நோக்கத்தோடு செயல்படும் குழுக்களை அழிப்பதற்காக Citadel போராடும். 

இதன் இந்திய வடிவத்தில் என்ன நடக்கிறதென்று பார்ப்போம். 

வருடம் 2000. நைனிடால் நகரம். ஹனி என்கிற பெண் (சமந்தா) தன்னுடைய மகள் நாடியாவோடு வாழ்கிறாள். ஓர் உணவகத்தை அவள் நடத்தி வருகிறாள். ஹனியையும் அவளது மகளையும் கொல்லும் நோக்கத்தோடு ஒரு குழு துரத்துகிறது. அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக, ஆட்டோ மாணிக்கமாக இருந்த  ஹனி ‘பாட்ஷா’வாக அவதாரம் எடுக்கிறாள். அவளது பின்னணி என்ன?

ஹனியும் அவளது மகளும் ஆபத்தில் இருப்பதை அறியும் Bunny என்னும் இளைஞன், தன்னுடைய பழைய கூட்டாளிகளை இணைத்துக் கொண்டு கிளம்புகிறான். இவனுடைய பின்னணி என்ன? இவர்களை கொலைவெறியுடன் துரத்துபவர்கள் யார்? அவர்களிடமிருந்து ஹனியும் பனியும் தப்பித்தார்களா என்பதுதான் இந்தத் தொடரின் மையம். 

1992-க்கும் 2000-க்கும் இடையிலான காட்சிகள் மாறி மாறி காட்டப்படுவதின் மூலம் இதன் திரைக்கதை மெல்ல மெல்ல விரிகிறது. அதன் படி என்ன புரிந்து கொள்கிறோம்?

ஹனி ராஜ குடும்பத்தின் வாரிசு. ஆனால் சட்டப்பூர்வமான வழியில் பிறக்காத வாரிசு. நடிகையாக வேண்டும் என்கிற கனவுடன், சிறு வயதிலிருந்தே வாழ்ந்து வரும் ஹனிக்கு அவளுடைய விருப்பம் இல்லாமல் திருமணம் நடக்கிறது. அதிலிருந்து தப்பித்து மும்பைக்கு செல்லும் ஹனி, நடிகையாகும் லட்சியத்திற்காக போராடுகிறாள். ஆனால் எல்லா இடத்திலும் தோல்வி. சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை. ‘அட்ஜட்ஸ்மெண்ட்’ இம்சைகள் வேறு. வீட்டு வாடகையை தர முடியாத பொருளாதார பிரச்னைகள். 

சினிமாவின் ஸ்டன்ட் காட்சிகளில் டூப்பாக நடிப்பவன் Bunny. (வருண் தவான்). அவனுக்கு நிழலான ஒரு முகம் உண்டு. ஸ்பை ஏஜென்ட்டாகவும் இருக்கிறான். பணத்திற்காக சிரமப்படும் சமந்தாவிடம், தன்னுடைய திட்டத்திற்கு உதவி செய்யச் சொல்லி கேட்கிறான். அதன் மூலம் ஹனிக்கு சிறிது பணம் கிடைக்கும். முதலில் மறுத்தாலும் பொருளாதார சிக்கல் காரணமாக சம்மதிக்கிறாள் ஹனி.

அவள் எடுக்கும் அந்த முடிவு, மிகப் பெரிய சிக்கல்களுக்கு அவளை இட்டுச் செல்கிறது. தன்னுடைய மகளுடன் தலைமறைவு வாழ்க்கையை வாழுமளவிற்கு உயிராபத்து அவளை தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது. 

சமந்தாவின் ஆச்சரியமான திரைப்பயணம்!

ஹனியாக சமந்தா. இவர் நடிக்க வந்து ஏறத்தாழ 14 வருடங்கள் கடந்திருக்கின்றன. ஒரு சராசரியான குடும்பத்திலிருந்து கிளம்பி முட்டி மோதி பல போராட்டங்களுக்குப் பிறகு முன்னணி நடிகையாக ஆகியிருக்கிறார். இடையில் எத்தனையோ ஹிட் படங்கள், தோல்விப் படங்கள், காதல் திருமணம், விவாகரத்து, மயோசிடிஸ் என்னும் உடல்நலப் பிரச்சினை, அதிலிருந்து மீள்வதற்கான போராட்டம் என்று எத்தனையோ பார்த்து விட்டார். வேறு எந்த நடிகையாக இருந்தாலும் இந்நேரம்  ஃபீல்டில் இருந்து காணாமல் போயிருப்பார். ஆனால் சமந்தா இன்னமும் முன்னணி நடிகையாகவே தொடர்கிறார். அதிலும் கச்சிதமான ஃபிட்னஸைக் கொண்ட ஆக்ஷன் செய்யும் நடிகையாக. 

Citadel: Honey Bunny

நடிப்பில் சமந்தா அசத்தி விடுவார் என்பதைத் தனியாக சொல்ல வேண்டியதே இல்லை.  இந்தத் தொடரில், நடிகையாவதற்காக போராடும் காட்சிகளில் ‘ஹனி’யாக ஒரு சராசரிப் பெண்ணின் தவிப்புகளை எளிதாக நமக்கு கடத்தி விடுகிறார். சினிமாவின் துப்பாக்கிச் சண்டைக் காட்சிகளில் செத்துப் போகிறவர்கள் எப்படியெல்லாம் விழுவார்கள் என்பதை வருண் தவானுடன் இணைந்து நடித்துக் காட்டுவது முதற்கொண்டு பல காட்சிகளில் சமந்தாவின் நடிப்பு ‘க்யூட்’ ஆக இருக்கிறது. 

இன்னொன்று ‘பாட்ஷா’ அவதாரம். மகளைப் பாதுகாப்பதற்காக ஆபத்தின் எந்தவொரு எல்லையையும் சந்திக்கத்  துணியும் ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். உடல்நலப் பிரச்னைகளுக்கு இடையேயும் தன் உடலை ஃபிட்டாக வைத்துக் கொண்டு ஆக்ஷன் அசைவுகளையும் திறம்பட நிகழ்த்தியிருக்கிறார். 

விசுவாசம், துரோகம், சாகசம்..!

Bunny-ஆக வருண் தவான். ஒரு விசுவாசமான ஏஜென்ட்,  குடும்பத்தின் மீது பாசம் வைத்திருக்கும் தகப்பன் என்று இரண்டு முனைகளுக்கு இடையே தத்தளிக்கும் ஹீரோவாக தன்னுடைய சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்கும் அளவுக்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறார். 

ஏஜென்ட்களை உருவாக்கும் ‘குரு’ பாபாவாக கே.கே.மேனன். இவர் ஒரு அற்புதமான நடிகர் என்பது நமக்குத் தெரியும். எனவே இன்னமும் கூட இவரை ஆழமாகப் பயன்படுத்தியிருக்கலாம். அநாதைப் பிள்ளைகளை தேர்ந்தெடுத்து மூளைச்சலவை செய்து ‘தகப்பன்’ போன்ற பாவனையான பாசத்தைக் காண்பித்து உயிரையே கொடுக்கும் விசுவாசமான ஆயுதங்களாக அவர்களை மாற்றும் நயவஞ்சகமான பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். 

சிட்டாடல் குழுவின் கமாண்டராக சிம்ரன். “என்ன ஆச்சு.. உடனே பாருங்க” என்று கடுகடுவென்ற முகத்துடன் உத்தரவுகள் போடுவதைத் தவிர வேறொன்றையும் இவர் செய்யவில்லை. இவரையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம். கேதார் KD- யாக வில்லத்தனம் செய்யும் சாகிப் சலீம் தன்னுடைய பங்களிப்பை சரியாகத் தந்திருக்கிறார். 

குறிப்பாக ‘நாடியா’ என்னும் சிறுமியாக நடித்திருக்கும் காஷ்வி மஜ்முந்தரின் நடிப்பை அடிக்கோடிட்டு சொல்லியாக வேண்டும்.  தன்னுடைய மகளை ஒரு மினி ‘ஏஜென்ட்டாகவே’ வளர்க்கிறார் சமந்தா. ‘Play Mode’ என்கிற கோட் வேர்ட் வந்தால் அதற்கேற்ப மாறி விடுவாள், இந்தச் சிறுமி. ‘இவங்க எனிமியா, பிரெண்டா’ என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப சமயோசிதமாக செயல்படுவாள். அதற்காக விசுவாசமான கண்மூடித்தனமாகவும் செயல்படுவதில்லை. சூழலுக்கு ஏற்ப சுயமான முடிவையும் எடுப்பாள். அப்படியே தாயைப் போல. இந்தப் பாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறாள், காஷ்வி மஜ்முந்தர்.

சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், டாக்டர் ரகுவாக நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார், தலைவாசல் விஜய். பயங்கரவாதிகளுக்கு துணை போகும் ஆராய்ச்சியாளராக முதலில் தோற்றம் தந்தாலும் இவருடைய நல்ல நோக்கம் தெரியும் போது நெகிழ்வு ஏற்படுகிறது. குறுகிய நேரத்தில் இவருக்கும் சமந்தாவுக்கும் இடையில் ஏற்படும் கெமிஸ்ட்ரியான அன்பு சரியாக காட்டப்பட்டிருக்கிறது. 

ஆக்ஷன் + சென்ட்டிமென்ட்டின் கச்சிதமான கலவை

The Family Man, Farzi, Guns & Gulaabs போன்ற திரில்லர் தொடர்களை இயக்கியிருக்கும் Raj & DK-தான் இந்தத் தொடரையும் இயக்கியிருக்கிறார்கள். Citadel தொடருக்கென்று ஓர் அடிப்படையான வடிவம் இருக்கிறது. பெண்கள் செய்யும் சாகசங்களை முன்னிலைப்படுத்துவது. பெண் ஜேம்ஸ்பாண்ட் படம். 

சராசரியான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் எப்படி சாகசங்களை செய்யும் ஏஜென்ட்டாக மாறுகிறார் என்கிற கதையைச் சொல்வதான அடிப்படையில் இந்தத் தொடர் இருக்கும். இந்தியப் பார்வையாளர்களின் ரசனையை மனதில் கொண்டு இந்தத் தொடரை வடிவமைத்திருக்கிறார்கள். எனவே பெண்களின் பணி சார்ந்த போராட்டம், குடும்ப சென்ட்டிமென்ட், விசுவாசம், துரோகம் என்று பல்வேறு கலவைகளுடன் திரைக்கதை பயணிக்கிறது. 

தனது குருவான ‘பாபா’வை நம்பும் விசுவாசமான ஏஜென்ட்டாக வருண் தவானின் கேரெக்டர் ஸ்கெட்ச் நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவரைப் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் இருந்தாலும் அவற்றை உள்ளே புதைத்து வைத்துக் கொண்டு சொன்னதைப் பின்பற்றும் விசுவாசம். ஆனால் ஏஜென்ட்டாக மாறும் ஹனியால் அப்படி கண்மூடித்தனமான விசுவாசத்துடன் இருக்க முடியவில்லை. தான் பணியாற்றும் குழு நல்ல நோக்கத்துடன் செயல்படுகிறதா என்று ஆராய்கிறாள். அப்போது அவள் எடுக்கும் முடிவு, அவளுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போடுகிறது. 

இரண்டு காலக்கட்டங்களுக்கு இடையே மாறி மாறிப் பயணிக்கும் திரைக்கதை, குழப்பமில்லாமல் சொல்லப்பட வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டாலும் ஆங்காங்கே சற்று குழப்பம் வந்து விடுகிறது. எது நல்ல குழு, எது கெட்ட குழு என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டு அது பார்வையாளர்களுக்கு சரியாகவும் கடத்தப்பட்டால்தான், பார்க்கும் அனுபவம் சுவாரசியமாகும். இதில் அந்தக் குழப்பம் நேர்ந்து,  யார், யாரை அடித்துக் கொள்கிறார்கள் என்பதில் தெளிவில்லாததால் எந்தத் தரப்பில் பார்வையாளன் நிற்க வேண்டும் என்கிற சிக்கல் வந்து விடுகிறது. 

ஹாலிவுட் தரத்தில் ஓர் இந்திய அனுபவம்

Armada என்கிற சாதனத்தின் மூலம் உலகத்தின் பல்வேறு தகவல்கள், ஆயுத ரகசியங்கள் போன்றவற்றை ஒட்டுமொத்தமாக அறிந்து ஆள முடியும் என்று காட்டுகிறார்கள். அதைக் கைப்பற்றுவதற்காகத்தான் இரண்டு குழுக்களும் அடித்துக் கொள்கின்றன. ஆனால் அந்தச் சாதனத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது தெளிவாக்கப்படவில்லை. சில எபிசோடுகள் சுவாரசியமாக நகரும் அதே வேளையில் ஆங்காங்கே தொய்வு ஏற்படும் விபத்தும் நிகழ்ந்திருக்கிறது. 

சென்ட்டிமென்ட் + ஆக்ஷன் ஆகிய இரண்டின் கலவையும் இதன் திரைக்கதையில் சரியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அம்மா -மகள்,  அப்பா - மகள், கணவன் -மனைவி, குரு - சிஷ்யன் என்று வெவ்வேறு கோணங்களில் விரியும் உறவுகளும் அதன் சிக்கல்களும் பாசங்களும் பார்வையாளர்களுடன் கனெக்ட் ஆகும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

ஆக்ஷன் மற்றும் சேஸிங் காட்சிகள் சர்வதேச அளவிற்கான தரத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. தன்னுடைய இருப்பிடத்தை எதிரிகள் சூழும் காட்சியில் தேவைக்கேற்ப வெவ்வேறு ரக துப்பாக்கிகளை சடுதியில் எடுத்து சமந்தா சண்டையிடும் காட்சி பரபரப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. கிளைமாக்ஸில், லாங்டேக்கில் வரும் சண்டைக்காட்சி தீபாவளி பட்டாசு. 

இந்திய வாசனையுடன் ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்க்கும் அனுபவத்தை உத்தரவாதமாக தருகிறது, Citadel: Honey Bunny. அதிலும் சமந்தாவின் நடிப்பிற்காக இந்தத் தொடரை நிச்சயம் பார்க்கலாம்.