நல்லவனாக இருந்தால் இந்த உலகத்தில் வாழமுடியாது, சகுனிகள் இருக்கும் உலகத்தில் சாமர்த்தியமாக இருந்தால்தான் பிழைக்க முடியும் என்கிற தத்துவத்துக்கு நேர் எதிராக நின்று அறம் பேசும் படம்தான் ‘மெய்யழகன்’.
சுயநலமும், சூழ்ச்சிகளும், துரோகமும் சூழ்ந்த இந்த சமூகத்தில், அன்பும், அர்ப்பணிப்பும், பண்பும், பாசமும், எந்த எதிர்பார்ப்பும் இல்லா மனமும் கொண்ட வெள்ளந்தியான மனிதர்களும் நம்மிடையே வாழ்கிறார்கள் என்பதே ‘மெய்யழகன்' படத்தின் ஒன்லைன்.
சொத்துப் பிரச்சனையால் காலம்காலமாக வாழ்ந்த வீட்டை பங்காளிகளுக்கு கொடுத்துவிட்டு ஊரைவிட்டு குடும்பத்துடன் வெளியேறுகிறார் ஜெயப்பிரகாஷ். இவரது இளைய மகன் அர்விந்த் சுவாமி நேசித்த ஊரையும், சுவாசித்த மண்ணையும் விட்டுப் பிரிய மனம் இல்லாமல் நொந்தபடி சென்னை வந்து சேருகிறார். 22 ஆண்டுகள் மீண்டும் அந்த ஊர்பக்கமே போகாத அரவிந்த் சுவாமி தன் சித்தி மகளின் திருமணத்துக்காக மீண்டும் ஊருக்கு போகவேண்டிய நிர்பந்தம்.
தங்கையின் அன்புக்காகவும், கட்டாயத்துக்காகவும் வாங்கிவந்த பரிசை மட்டும் கொடுத்துவிட்டு மீண்டும் கடைசி பஸ் பிடித்து சென்னைக்கு ஓடவேண்டும் எனத்துடிக்கும் அர்விந்த் சுவாமிக்கு, அந்த ஊரில் இருந்து மறக்கவே முடியாத ஒரு நினைவுப் பொக்கிஷத்தைக் கொடுக்கிறார் கார்த்தி. பெயரே தெரியாமல் ஓர் இரவு முழுக்க கார்த்தியோடு பயணிக்கும் அரவிந்த் சுவாமி, கார்த்தியின் அன்பில் குற்ற உணர்ச்சிக்கொள்கிறார். அர்விந்த் சுவாமிக்கும், கார்த்திக்கும் என்ன உறவு, உண்மையிலேயே கார்த்தியின் பெயர் என்ன என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ்.
வெள்ளந்தியான மனிதனாக கார்த்தி. நேர்மையான பேச்சிலும், கள்ளம் கபடம் இல்லாத பழக்கவழக்கத்திலும் ‘நமக்கும் இப்படி ஒரு நண்பன் இருந்தா நல்லாயிருக்குமே’ என பொறாமைப்படவைக்கிறார். மண்வாசம் விலகாத நடிப்பால் திரையோடு நம்மைக் கட்டிப்போடுகிறார் கார்த்தி.
சென்னைக்காரனுக்கும், ஊர்காரனுக்கும் இடையிலான நடிப்பை அச்சு அசலாக கண் முன் நிறுத்தியிருக்கிறார் அர்விந்த் சுவாமி. மனைவியுடனான நிதானமான பேச்சிலும், கார்த்தியின் மீதான கோபத்திலும், குற்ற உணர்வில் கூனிக்குறுகி சாலையில் செருப்புகூட இல்லாமல் ஓடும் இடத்திலும் அரவிந்த் சுவாமி நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார்.
குட்டி குட்டி க்யூட் கவிதைகளால் திரைக்கதையை நிரப்பியிருக்கிறார் இயக்குநர் பிரேம்குமார். குறிப்பாக தங்கைக்கு மணமேடையில் வைத்து அரவிந்த் சுவாமி பரிசளிக்கும் காட்சி ஒரு அட்டகாசமான ஹைக்கூ கவிதை. அதேப்போல் கார்த்தியின் மனைவியான திவ்யாவும், அரவிந்த் சுவாமியும் ஆங்கிலத்தில் பேசும் இடம் செம கலாட்டா கவிதை. கார்த்தியும், அர்விந்த் சுவாமியும் கடைசியில் போனில் பேசுவது நெஞ்சை நனைக்கும் எமோஷனல் கவிதை. வசனங்கள் அவ்வளவு இயல்பாகவும், கேட்கவே இனிமையாகவும் இருக்கின்றன.
ஆனால், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம், ரொமான்ஸ் எதுவும் இல்லாமல் புரோமேன்ஸில் பயணிப்பதால் படம் ஒரு கட்டத்தில் அலுப்பைத் தருகிறது. எமோஷனலாக ஆரம்பிக்கும் படம் அதன்பின் எங்கெல்லாமோ போகிறது, என்னென்ன அரசியலோ பேசுகிறது எனப் படத்தின் கதைக்கு சம்பந்தம் இல்லாமல் திசைமாறுகிறது.
குடித்தால்தான் உண்மையைப் பேசுவோம் என நாலு பீர் அதுவும் மண்பானையில் குடித்துவிட்டு இரவு முழுக்க உலக அரசியலும், மன்னர் பரம்பரை பெருமைகளும், ஜல்லிக்கட்டு வீரவரலாறும், நம்ம பசங்களுக்கு நம்ம வரலாறு கத்துக்கொடுக்கணும் என மெசேஜ்களும் சொல்லிக்கொண்டிருப்பது படத்தின் தன்மையையே மொத்தமாக மாற்றிவிட்டது. நாஸ்டால்ஜிக் ஃபீலுக்குள் போகவேண்டிய படம் அப்படியே அணைக்கட்டுக்குள் நமத்துப்போய் நழுவி ஓடுகிறது.
கார்த்தி, அர்விந்த் சாமிக்கு அடுத்து படத்தை தாங்கிப்பிடிப்பது ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜு. காட்சிகளை தஞ்சாவூர் ஓவியம்போல ஒளியூட்டி அழகூட்டியிருக்கிறார். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை காதுகளுக்கு இனிமை சேர்க்கிறது. குறிப்பாக கமல்ஹாசனின் குரலில் வரும் ‘யாரோ இவன் யாரோ’ பாடல் நெஞ்சை பிழிகிறது.
நெகிழும்படியான காட்சிகளாலும், வசனங்களாலும் நம் மனதை கடந்த கால நினைவுகளுக்கு இழுத்துசெல்லும் இயக்குநர், திடீரென அந்தரத்தில் அம்போவென விட்டுவிட்டுப் போகாமல் இருந்திருந்தால் ‘மெய்யழகனை’ எந்தப் பொய்யும் இல்லாமல் கொண்டாடியிருக்கலாம்.