திருநெல்வேலி மாவட்டம், புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் சிவனைந்தன் (பொன்வேல்) தீவிர ரஜினி ரசிகன். வகுப்பில் நம்பர் 1 மாணவன். பாடமெடுக்கும் டீச்சர் மீதே இனம்புரியாத ஒரு காதலை வளர்த்துகொள்ளும் விடலைப் பையன் என கொண்டாட்டங்களோடு வாழ்க்கையை வண்ணமயமாக வாழ விரும்புகிற சராசரி சிறுவன். ஓட்டமும், ஆட்டமும், பாட்டமுமாக இவனுடைய பள்ளி வாழ்க்கை பளபளக்கிறது. ஆனால், பள்ளிச் சுவரைத் தாண்டினால், வீட்டில் தாண்டவமாடும் வறுமையின் கோரம் அவனை நொறுக்கி ஒரு மூலைக்குள் முடக்குகிறது!
வீட்டில் இருக்கும் ஏழ்மை, கடன் சுமை, தாயின் ஜீவனத்துக்கான நெருக்கடி என எல்லாம் சேர்ந்து, பள்ளி விடுமுறை நாட்களில் அக்கா(திவ்யா துரைசாமி) வேம்புவோடு சேர்ந்து அவனை வாழைத்தார் சுமக்கும் குழந்தைத்தொழிலாளியாக வேலைக்குச் செல்வதற்கு கட்டாயப்படுத்துகிறது. சிவனைந்தன் இந்த வேலை செய்யாமல் இருக்க பல்வேறு தகிடுதத்தங்கள் செய்தாலும், அவனது முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. பள்ளி ஆசிரியை பூங்கொடி (நிகிலா விமல்) மீது நுழையத் தொடங்கும் அன்பு, ஓர் அளவுக்கு அவனை மனதளவில் நிம்மதியாக்குகிறது.
இச்சூழலில், சிவனைந்தனுக்கு பள்ளியின் கலைநிகழ்ச்சியில் நடனமாடும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அதே நாளில் அவனது தாயின் வற்புறுத்தலால், வாழைத்தார் சுமக்கச் செல்ல வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. சிவனைந்தனின் அக்கா வேம்புவும், அவளது காதலன் கனி(கலையரசன்)யும் சிவனைந்தனை அந்நாளில் அவ்வேலையில் இருந்து விடுவிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த ஒற்றை நாள் இவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் முக்கியமான நாளாக மாறுகிறது. அந்நாளில் என்ன நடந்தது என்பதுதான் ‘வாழை’ படத்தின் க்ளைமேக்ஸ்.
மாரி செல்வராஜ் இயக்குநராக உச்சம் பெற்றிருக்கும் படம் ‘வாழை’. எந்தவிதமான துயரத்தையும் மிகைப்படுத்தாமல், வலிந்து உணர்ச்சிகளைத் திணிக்காமல், உண்மையான உணர்வுகளை அதன் இயல்போடு காட்சிப்படுத்தியிருக்கிறார். உண்மைச் சம்பவங்களின் வழியே வாழ்வியல் அர்த்தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு ஆசிரியை மீது மாணவனுக்கு ஏற்படும் காதல் என சிலர் இதைக் கடந்துபோகலாம். ஆனால், ஒரு ஆசிரியை மாணவன் மீதான அன்பையும், அவனது வாழ்க்கை நெருக்கடிகளைக் கவனிக்கிற புரிதலையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
சிவனைந்தனாக நடித்திருக்கும் பொன்வேல், ஆசிரியை பூங்கொடியாக நடித்திருக்கும் நிகிலா விமல், வேம்புவாக நடித்திருக்கும் திவ்யா துரைசாமி, கனியாக நடித்திருக்கும் கலையரசன், அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி, வியாபாரி ஜேஎஸ்கே என எல்லோருமே நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.
மாரி செல்வராஜ் எழுத்தில் வசனங்கள் மிக இயல்பாகவும் ஆழமாகவும் உரையாடுகின்றன. “என் பையன் நான் இல்லைனாலும் வாழணும்; அவனுக்கு நான் உழைக்கக் கத்து தரேன்”, “நீ எங்களுக்கு குடுக்குற ஒத்த ரூபா இனாமில்ல... எங்க உழைப்புக்குத் தரக் கூலி”, “இங்க ரஜினி படம்தாம்ல ஓடுது... கமல் படம் என்னைக்கு ஓடிருக்கு?” போன்ற வசனங்கள் இதற்கு சாட்சி.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில், கிராமப்புறத்தின் எளிமையும், வேதனைகளும் மிக நிஜமாகப் படமாக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணனின் இசை, கதையின் உணர்ச்சிகளை மேலேற்றி, அவற்றுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. சூர்யா பிரதமனின் எடிட்டிங் படத்தின் ஓட்டத்தையும், ஒழுங்கையும் சரியாக கட்டுக்குள் வைத்திருக்கிறது. ஓடிடி-க்காக எடுக்கப்பட்ட படம் என்பதாலோ என்னவோ ஒரு ஆவணப் படத்துக்கான சாயல் ‘வாழை’யில் ஒட்டியிருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. முதல் பாதியில் நிறுத்தி, நிதானமாக காட்சிகள் நகர்வது வேகத்தடையாக இருக்கிறது. ஆனால், இவை படத்தின் ஆன்மாவை எந்தவிததிலும் பாதிக்கவில்லை.‘வாழை’ இன்பம், துன்பம், நியாயம், அநியாயம், பசி, பழிவாங்கல் என அனைத்தையும் ஒருங்கே சொல்லும் ஒரு ஆழமான திரைப்படம்.
‘வாழை’ அடுத்த தலைமுறைக்கு தமிழ்சினிமாவைக் காப்பாற்றி கொண்டு செல்ல மாரி செல்வராஜ் கட்டியிருக்கும் நோவாவின் பேழை!