வேட்டையன் 
சினிமா விமர்சனம்

‘வேட்டையன்’ விமர்சனம் : ரஜினி + ஞானவேல் கூட்டணி வென்றதா, படம் எப்படி இருக்கு?!

ரஜினிகாந்த் நடிக்க, த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் 'வேட்டையன்' திரைப்படத்தின் முழுமையான விமர்சனம் இங்கே!

News Tremor Desk

கிரிமினல்களை மட்டுமே சுட்டுத் தள்ளும் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் தவறுதலாக ஒரு அப்பாவியை சுட்டுக்கொன்றுவிட்டால் என்ன நடக்கும் என்பதுதான் ‘வேட்டையன்' படத்தின் ஒன்லைன். 

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்ட ஸ்வாதி, அவரைக் கொன்றதாக கைது செய்யப்பட்டு பின்னர் சிறையில் ஒயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் சொன்ன ராம்குமாரின் வழக்கைப் பின்னணியாக கொண்டு நேர்மையாக ஒரு கதையைப் பிண்ணியிருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல்.  

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ரஜினிகாந்த் (அதியன்) நூறு சதவிகிதம் குற்றவாளி என உறுதியானப் பின்பே என்கவுன்ட்டர் செய்யும் நேர்மையான அதிகாரி. இவரது மனைவியாக கிச்சன் ரெசிப்பி வீடியோ ஸ்பெஷலிஸ்ட் மஞ்சு வாரியர். இவரின் வீடியோகிராஃபராக, ரஜினியின் அண்ணன் மகனாக ரக்‌ஷன். சைபர் குற்றவாளியான ஃபகத் ஃபாசில் (பேட்ரிக்) ரஜினியின் ரகசியக் கூட்டாளியாக எல்லா ஆப்பரேஷனிலும் டெக்னிக்கலாக  துணை நிற்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் துஷாரா (சரண்யா) பள்ளியில் போதைப்பொருள் பதுக்கப்படுவதைப் புகாராக கடிதம் எழுதி மாவட்ட எஸ்பி-யான ரஜினிகாந்த்துக்கு அனுப்புகிறார். கடிதம் வந்தததும் களத்தில் இறங்கி துப்பாக்கியால் போதை ஆசாமிகளை வேட்டையாடுகிறார் ரஜினி. இதற்கிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் டாக்டரேட் படிப்பதற்காக சென்னைப் பள்ளிக்கு இடம்மாறும் துஷாரா பள்ளியில் வைத்தே திடீரென கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். தமிழ்நாடு முழுக்க ஆசிரியர் மாணவர் போராட்டம் வெடிக்க அரசு விசாரணையை முடுக்கிவிடுகிறது. உண்மையானக் குற்றவாளியை ரஜினி கண்டுபிடித்தாரா, சுட்டுக்கொன்றாரா இல்லை பேசியே திருத்தினாரா என்பதுதான் க்ளைமேக்ஸ். 

ரஜினியின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அலுங்காமல் குலுங்காமல் வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர். ரஜினியும் அதிகம் மெனக்கெடாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். மனித உரிமைகள் ஆணைய நீதிபதியாக அமிதாப் பச்சன் நல்ல காஸ்ட்டிங். ‘’மனசிலோயோ’’ பாடல் மற்றும் சில மான்டேஜ் காட்சிகளில் மட்டும் மஞ்சு வாரியரை நடிக்கவைத்துவிட்டு அவசரமாக திருவனந்தபுரத்துக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். ட்ரெய்னிங் ஐபிஎஸ் ஆக ரித்திகா சிங், கார்ப்பரேட் செகரெட்டரியாக அபிராமி, பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரியாக ரோகிணி ஆகியோர் சில காட்சிகளில் வந்து போகிறார்கள். வலுவான கதாபாத்திரம் துஷாராவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறப்பாகவே செய்திருக்கிறார். ராணா டகுபதி (நடராஜ்) கார்ப்பரேட் வில்லனாகப் பக்கா பொருத்தம்.

‘வேட்டையன்’ மிக வலுவான கதையைக் கொண்ட படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நாம் செய்தித்தாள்களில் அன்றாடம் கடக்கும் குற்ற செய்திகளுக்குப் பின்னணியில் இருக்கும் அரசியல் + கார்ப்பரேட் + போலீஸ் வலைப்பின்னல்களை எல்லா மக்களுக்கும் சொல்ல வேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஞானவேலின் நோக்கம் பாராட்டப்படவேண்டியது. அந்த நோக்கத்தை ரஜினியைக் கொண்டு நிறைவேற்றிய விதத்தில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர். ஆனால், கிருத்திகா மற்றும் ஞானவேலின் திரைக்கதைதான் ஏகத்துக்கும் தடுமாறுகிறது. ரஜினி படமாகவும் இல்லாமல், சரியாக சொல்ல வந்த கதையையும் சொல்லாமல் டிராக் மாறி மாறி படம் பயணிக்கிறது. 

படத்தின் முதல் அரை மணி நேரம் அறிமுக பில்டப்களிலேயே முடியே இடைவேளைக்கு முன்பு படம் சூடுபிடிக்கிறது. இரண்டாவது பாதியில் அட்டகாசமான க்ரைம் த்ரில்லர் காத்திருக்கிறது என எதிர்பார்த்து நிமிர்ந்து உட்கார்ந்தால், வேகமும் இல்லாமல், விறுவிறுப்பும் இல்லாமல் திரைக்கதையை அலைபாயவிட்டு மீண்டும் நம்மை சீட்டில் சரியவைக்கிறார் இயக்குநர். அனிருத் தன்னால் முடிந்தவரை பாடல்களாலும், பின்னணி இசையாலும் படத்தின் வேகத்தைக் கூட்ட முயற்சி செய்திருக்கிறார்.

உண்மையான வில்லன் யார், கொலை எப்படி நிகழ்ந்தது என்கிற உண்மை தெரிந்தப்பிறகு திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. கோர்ட்டில் இருக்கும் ரஜினி திடீரென ஹெலிகாப்டரில் பறந்துபோய் வில்லனை சுடுகிறார், பிடிக்கிறார் என்பதெல்லாம் ‘’என்னை இன்னும் நீ பைத்திக்காரனாவே நினைச்சுட்டுருக்கல'’ என கேட்கவைக்கிறது. இறுதியில் சமுத்திரக்கனியாகவும் ரஜினிகாந்த்தை மாற்றி கருத்து சொல்லவைத்திருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல். அது ரஜினிக்கும் சரி, அதியன் கேரெக்டருக்கும் சரி சுத்தமாகப் பொருந்தவேயில்லை. பேட்ரிக் கேரெக்டரில் வெறும் காமெடியனாக ஃபகத் ஃபாசிலை நடிக்கவைத்திருப்பதற்கு வன்மையானக் கண்டங்கள்.

படம் கமர்ஷியலாகவும் இல்லாமல் எமோஷனலாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு, பார்வையாளர்களையும் குழப்புகிறது. நேரம் நிறைய இருந்தால் ‘வேட்டையன்' படத்தை தியேட்டர்களில் ஒருமுறை பார்க்கலாம்.