சினிமா

'வேட்டையன்' இயக்குநர் ஞானவேல் மீது போலீஸில் புகார்!

'வேட்டையன்' பட இயக்குநர் ஞானவேல் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Aathira

'ஜெய்பீம்' ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று 'வேட்டையன்' திரைப்படம் வெளியானது. கல்வி தனியார் மயம் ஆவதையும் என்கவுன்டர் பற்றியும் இந்த படம் பல விஷயங்களை பேசி இருந்தது. இந்த நிலையில், கோவில்பட்டியில் இடம் பெற்றுள்ள அரசு பள்ளி ஒன்றின் பெயரை தவறாக சித்தரிக்கும் விதமான காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்ததாகவும் அந்த ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் கொடுத்துள்ளனர். அதாவது, கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் ஆசிரியரை தவறாக படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பரப்பியதால் சர்ச்சை என்ற வாசகம் படத்தில் செய்தி வாசிக்கும் ஓர் இடத்தில் வரும். அதை உடனடியாக நீக்க வேண்டும் என கோவில்பட்டி சமூக ஆர்வலர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா என்பவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் பள்ளி தொடர்ந்து நூறு சதவீத தேர்ச்சியைக் காட்டி வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு சிறந்த அரசுப்பள்ளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்படியான பள்ளியை தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தியிருப்பதை உடனடியாக நீக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி நீக்கவில்லை என்றால் இயக்குநர் மீதும் படங்கள் வெளியாகும் திரையரங்குகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் எச்சரித்துள்ளனர்.