சினிமா

ஏரியில் ஆக்கிரமிப்பா? அரசியல் பழிவாங்கலா? நடிகர் நாகர்ஜூனாவுக்கு சொந்தமான கட்டடம் இடிப்பு!

சட்டவிரோதமாக இடத்தை ஆக்கிரமிப்பு செய்தற்காக நடிகர் நாகர்ஜூனாவின் கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது.

Aathira

ஹைதராபாத் மாநகராட்சியில் அரசுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ள செயற்கைக்கோள் மூலம் கண்டறியும் நடவடிக்கையில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட குளங்களைச் சுற்றி பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மாதப்பூர், தம்மிடிகுண்டா குளத்தை ஆக்கிரமித்து நடிகர் நாகர்ஜூனா சுமார் 3.5 ஏக்கர் நிலப்பரப்பளவில் பிரமாண்ட கட்டிடம் ஒன்றைக் கட்டியிருக்கிறார். இதில் பல முக்கிய பிரபலங்களின் திருமணமும் திரைப்பட படப்பிடிப்பும் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு நிறுவனம் நாகார்ஜூனாவுக்கு சொந்தமான இந்த கட்டடத்தின் பெரும்பகுதியை ராட்சத இயந்திரம் கொண்டு இடித்துத் தள்ளியிருக்கிறது. இதனால், காலை முதலே அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது.

"ஏரியை நாங்கள் ஆக்கரமிக்கவேயில்லை. என்னுடைய கன்வென்ஷன் மையம் இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்வேன்" என அறிக்கை வெளியிட்டிருக்கிறார் நடிகர் நாகர்ஜுனா.

கட்டட இடிப்புக்கு அரசியல் பழிவாங்கலே காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.