உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். பின்பு உடல்நலன் தேறியவர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தான் நலமுடன் இருப்பதாகவும் சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 'கூலி' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். " 'கூலி' படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்து விட்டது. ரஜினி நன்றாக இருக்கிறார். அவரிடம் பேசினேன். விசாகப்பட்டினம் படப்பிடிப்பு தொடங்கும் முன் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு முன்பே ரஜினிகாந்த் 30-ம் தேதி மருத்துவ சிகிச்சை இருப்பதாக கூறினார். ரஜினியை தவிர பிற பெரிய நடிகர்களும் படத்தில் இருப்பதால் முன் கூட்டியே சொல்லி இருந்தார். இதனால் 28-ம் தேதிக்குள் ரஜினி நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டது. 29-ம் தேதி சென்னை திரும்பினார். அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், இந்த செய்தி பதட்டமாகும் அளவிற்கு எப்படி வைரலானது என தெரியவில்லை.
ரஜினி உடல்நிலை மீறி படம் பெரிது கிடையாது. அவரது உடல் நலம் தான் முக்கியம். அவருக்கு பாதிப்பு ஏதாவது ஏற்பட்டு இருந்தால் படக்குழு முழுவதும் மருத்துவமனையில் தான் நின்று இருக்கும். அவரை பற்றி வந்த செய்திகள் குறிப்பாக யூடியூப் தளங்களில் யார் யாரோ உட்கார்ந்து பேசியதை பார்க்கும்போது மன உளைச்சலாக இருந்தது.
ரஜினி சார் நன்றாக இருக்கிறார். ஆண்டவன் அருளால் அவருக்கு ஒன்றும் ஆகாது. இந்த வயதிலும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நடிப்பதை கொண்டாடுகிறோம். எந்த தகவலும் உண்மையாக இருந்தால் மட்டுமே அதிகாரப்பூர்வமாக சொல்லுங்கள். மருத்துவ சிகிச்சை முடிந்து ஒய்வு தேவைப்படுவதால் மீண்டும் அக்டோபர் 15-ம் தேதி முதல் ரஜினிக்கான படப்பிடிப்பு தொடங்கும்" என்றார் லோகேஷ் கனகராஜ்.