வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 'GOAT' படம் கடந்த வாரம் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியான இது முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ. 126 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. ஏஐ தொழில்நுட்பத்தில் நடிகர் விஜயகாந்தைக் கொண்டு வந்தது, நடிகர் அஜித் ரெஃபரன்ஸ், 'மட்ட' பாடலுக்கு த்ரிஷாவின் நடனம், சிவகார்த்திகேயன் கேமியோ எனப் பல சர்ப்ரைஸ் படத்தில் கொண்டு வந்திருந்தார் வெங்கட்பிரபு. குறிப்பாக, கிளைமாக்ஸில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 'சென்னை vs மும்பை' கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருக்கும் அதேசமயம் 'தளபதி vs இளையதளபதி' மோதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்தது. அதில், தோனியும் விஜயும் சந்தித்துக் கொள்ளும்படியான காட்சி ஒன்றை வெங்கட்பிரபு வடிவமைத்திருக்கிறார்.
கிரிக்கெட் மேட்ச் தொடங்குவதற்கு முன்பாக தோனியை சந்தித்து நடிகர் விஜய் 'ஆல் தி பெஸ்ட் ஃபார் பைனல்ஸ்' என்று சொல்வது போன்று ஒரு காட்சியை அமைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. விஜய் மற்றும் தோனி இருவரையும் ஒரு காட்சியிலாவது ஒன்றாக கொண்டு வந்துவிட வேண்டும் என்பதுதான் வெங்கட்பிரபுவின் பெரு விருப்பமாக இருந்திருக்கிறது. ஆனால், 'GOAT' பட சமயத்தின் போது தோனியின் தேதி கிடைக்காததால் வேறு வழி இல்லாமல் காட்சியை மாற்றி அமைத்திருக்கிறார்கள். இந்த விஷயத்தை இயக்குநர் வெங்கட்பிரபு, சமூகவலைதள உரையாடல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.