தொடர்ந்து நடிகர்கள் மீது சமூகவலைதள பிரபலங்கள் மீதும் பாலியல் புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் ஜானி, நடிகர் எடவெலா பாபு ஆகியோர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டனர். இந்த வரிசையில் ஆந்திராவை சேர்ந்த பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது மும்பையை சேர்ந்த நடிகை ஒருவர் பாலியல் தொல்லை புகார் கொடுத்திருக்கிறார்.
தன்னை காதலித்து திருமணம் செய்வதாக சொல்லி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் நிர்வாணமாக தன்னை புகைப்படம், வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி கிட்டத்தட்ட ரூ. 2 கோடி பணம் பறித்திருப்பதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்திருக்கிறார்.
25 வயதாகும் ஹர்ஷா சாய் ஏழைகளுக்கு உதவுவது, 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை நான்கு ரூபாய்க்கு வாங்குவது என வெளிநாடுகளில் ஹிட்டான கான்செப்ட்டை உள்ளூரில் செய்து பிரபலமானவர். இவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நர்சிங்கி காவல்துறையினர் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். ஹர்ஷா சாய் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்தப் புகார்கள் அனைத்தும் தன்னிடம் இருந்து பணம் பறிப்பதற்காக என்றும் இவை எல்லாம் போலியானவை என்றும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஹர்ஷா சாய் விளக்கம் கொடுத்திருக்கிறார்.