சினிமா

கெளதம் மேனனை நம்பி ரிஸ்க் எடுக்கும் மம்மூட்டி… சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் ஹீரோவா?

சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷும், மம்மூட்டியும் இணைந்து நடிக்க, மம்மூட்டியே தயாரிக்க, கெளதம் மேனன் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

Jeeva

தமிழின் முன்னணி சினிமா இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். 'மின்னலே' படம் தமிழ் சினிமாவுக்குள் இயக்குநராக அறிமுகமான கெளதம் மேனன், ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு', ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ எனப்பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். ஆனால், ஒரு கட்டத்தில் படத்தயாரிப்பு, ஃபர்ஸ்ட் காப்பி என வேறு ரூட்டில் பயணிக்க ஆரம்பித்தவருக்கு பல்வேறு பிரச்சனைகள் வர ஆரம்பித்தது. 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தை அடுத்து கெளதம் மேனன் இயக்கிய எல்லா படங்களுமே ரிலீஸின்போது பிரச்சனையை சந்தித்தன.

‘துருவ நட்சத்திரம்' எனப்பெயரிட்டு முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த இப்படம் பின்னர் விக்ரம் நடிக்க ஷூட்டிங் ஆரம்பமானது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை. இதனால் தமிழில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு மலையாளத்தில் வாய்ப்பளித்திருக்கிறார் மம்மூட்டி.

மம்மூட்டி - கெளதம் மேனன்

சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷும், மம்மூட்டியும் இணைந்து நடிக்க, மம்மூட்டியே தயாரிக்க, கெளதம் மேனன் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. நடிகையும், திரைக்கதை எழுத்தாளருமான லேனாவும் இந்தப் பூஜையில் கலந்துகொண்டதன் மூலம் அவரும் இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரிகிறது.

லேனா

தர்புகா சிவா இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு துல்கர் சல்மானின் ‘ஏபிசிடி' படத்துக்கு கதை, திரைக்கதை எழுதிய சூரஜ் - நீரஜ் கதை எழுதியிருக்கிறார்கள். கெளதம் மேனன் படத்தின் இயக்குநர் மட்டுமே. 'துருவ நட்சத்திரம்' படத்தில் கெளதமுடன் இணைந்து பணியாற்றிய விஷ்ணு தேவ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

த்ரில்லர் படமான இதில் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்!