நடிகை த்ரிஷா 
சினிமா

நடிகை த்ரிஷா தொடர்ந்த வழக்கு; முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!

பக்கத்து வீட்டாருடன் மதில் சுவர் தொடர்பாக எழுந்த பிரச்சினைக்கு நடிகை த்ரிஷா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

Aathira

சென்னை செனடாஃப் ரோடு பகுதியில் நடிகை த்ரிஷாவின் வீடு உள்ளது. இங்கு தனது அம்மா மற்றும் குடும்பதினருடன் வசித்து வருகிறார் த்ரிஷா. இந்த நிலையில், தனது வீட்டின் கட்டமைப்பை பாதிக்கும் வகையில் பொதுவான மதில் சுவரை இடித்து கட்டுமானம் மேற்கொள்ள அண்டை வீட்டார் மெய்யப்பனுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் முன்பு வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகை த்ரிஷா தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் அந்த மதில் சுவரை இடிக்க இடைக்காலத் தடை விதித்தது.

நடிகை த்ரிஷா

இதனையடுத்து, இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமனிடம் நடிகை த்ரிஷா மற்றும் மெய்யப்பன் என இரு தரப்பினரும் தங்களுக்குள் பிரச்சினையை சமரசம் செய்து கொண்டு விட்டதாகத் தெரிவித்தனர். இதனால், இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. இதுமட்டுமல்லாது நடிகை த்ரிஷா செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திருப்பிக் கொடுக்கவும் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.