இந்தியன் - 2 
சினிமா

Indian 2 விமர்சனம் : ஊழல் செய்திருப்பது வில்லன்களா, கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியா?!

''Corruption causes cancer and it kills'' என்கிற கமல்ஹாசனின் குரலோடு படம் தொடங்குகிறது. ஆனால்...

News Tremor Desk

ஒவ்வொருவரின் வீட்டில் இருந்தும்தான் லஞ்ச, ஊழல் குற்றவாளிகள் உருவாகிறார்கள். அதனால் நாட்டைத் திருத்துவதற்கு முன்பு வீட்டைத்திருத்தவேண்டும் என்கிற ஒன்லைன்தான் இந்தியன் - 2.

சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷி… இந்த நான்கு பேரும் சேர்ந்து ‘Barking Dogs’ எனும் யூ-ட்யூப் சேனல் நடத்துகிறார்கள். சாலையோரம் உச்சா போகிறவர் முதல் குப்பையை ஒழுங்காக அள்ளாத தூய்மைப் பணியாளர் வரை கோபப்பட்டு ‘’Lets Bark’’ என காமன்மேன் கிராஃபிக்ஸ் எல்லாம் செய்து வீடியோ வெளியிட்டு  ‘’வி ஆர் ஃப்ரம் சோஷியல் மீடியா’’ என போலீஸையே அலறவிடுகிறார்கள். ஃபாலோயர்களை குவிக்கிறார்கள்.

டீச்சர் வேலைக்காக லஞ்சம் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் பெண்ணுக்காக நீதிகேட்டு சித்தார்த் போராட்டம் செய்ய இன்ஸ்பெக்டர் சப்பு சப்பென்று அறைந்து அவரை ஜெயிலில் தள்ளுகிறார். சித்தார்த்தின் பணக்கார கேர்ள் ஃப்ரெண்ட் ரகுல் ப்ரீத் சிங் பிஎம்டபிள்யூ மினி கூப்பரில் வந்து ‘’இதெல்லாம் உனக்குத் தேவையா… இப்படியெல்லாம் பிரச்சனை பண்ணிட்டு இருந்தா நமக்கு நாளைக்கு அமெரிக்கா போக விசா கிடைக்காது’’ என ஜாமீனில் எடுத்துவிட்டு கோபப்படுகிறார். 

இந்தியன் 2

‘’நம்மளால ஒன்னுமே பண்ணமுடியாதா’’ என விரக்தியில் இந்த பார்க்கிங் டாக்ஸ் நால்வரும் மொட்டைமாடியில் ஒன்றுகூட ‘’இந்த அநியாயத்தை எல்லாம் தட்டிக்கேட்க ஒருத்தர் இருக்காரு… அவருதான் இந்தியன் தாத்தா’’ என சித்தார்த் சொல்ல, வழக்கம்போல மற்றவர்கள் ''அவரு உயிரோட இருக்காரா, அவரை எப்படி கண்டுபிடிக்கிறது'' என்றெல்லாம் கேட்க, சித்தார்த் ''சோஷியல் மீடியால ட்ரெண்ட் பண்ணா கண்டுபிடிச்சிலாம்'' என ஐடியா கொடுக்க, ''தாத்தா தாய்வான்ல இருக்காரு'' என மெசேஜ் வருகிறது. கடலுக்குள் பிகினி அழகிகளுடன் சல்லாபம் செய்யும் கல்வி கொள்ளைத் தலைவனை சம்பவம் செய்வதோடு இந்தியன் தாத்தா அறிமுகமாகிறார்.

‘’Comeback Indian’’ என வரவேற்கும் சித்தார்த் தலைமையிலான பார்க்கிங் டாக்ஸ் பின்னர்  ‘’Goback Indian’’ என ட்ரெண்டிங் என செய்கிறது. இந்த கம்பேக்கிற்கும், கோ பேக்கிற்கும் இடையே என்ன நடக்கிறது என்பதுதான் இந்தியன் 2 படத்தின் மொத்தக் கதை!

இந்தியன் -2

‘’தாத்தா வர்றாரு கதறவிடப்போறாரு’’ என அனிருத் கதற கதற பாடியபோதே கொஞ்சம் உஷாராகியிருக்கவேண்டும். ட்ரெய்லர் பார்த்தாவது புரிந்திருக்கவேண்டும். அப்படியும் மீறி கமல்ஹாசன் மீதும், ஷங்கர் மீதும் நம்பிக்கை வைத்து 200 ரூபாய் டிக்கெட் எடுத்து தியேட்டருக்கு வந்தவர்களை, சித்தார்த்தை இன்ஸ்பெக்டர் சப்பு சப்பென கன்னத்தில் அறைந்ததுபோல ஷங்கரும், கமல்ஹாசனும் ‘’வருவியா… வருவியா’’ என மாறி மாறி கன்னத்தில் அறைந்திருக்கிறார்கள். 

சென்னையில் சித்தார்த் அண்ட் கேங்க் சம்பவம் செய்ய, கமல்ஹாசனோ குஜராத், பஞ்சாப் என எல்லைத்தாண்டி ஊழல்வாதிகளை ஒழிக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர் எலிமினேட் ஆகும்போதும் கமல்ஹாசன் ஒரு ஐந்து நிமிட உரை நிகழ்த்துவார். அதேப்போல வில்லன்கள் ஒவ்வொருவருக்கும் வர்மத்தால் தண்டனை கொடுத்துவிட்டு அதன்பிறகு கமல்ஹாசன் வார்த்தைகளால் அந்த தண்டனையை விவரித்து நம் பொறுமையை சோதிக்கிறார்.

இந்தியன் 2

படத்தில் பாராட்டும்படி எதுவுமே இல்லையா என்றால் இருக்கிறது. இன்றைய யூ-ட்யூப் டாக்டர்களின் உண்மைநிலையை துணிச்சலாகச் சொன்னவகையில் ஷங்கரைப் பாராட்டலாம். மிகச்சிறந்த நடிகன் கமல்ஹாசனை நவராத்திரி கொலு பொம்மைபோல நடமாடவிட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அனிருத்தின் இசை பெரிதாகத் தப்பாக இல்லை. ரவி வர்மனும் தன்னுடைய கேமரா ஆங்கிள்களால் படத்துக்கான பிரமாண்டத்தைக் கூட்டியிருக்கிறார். மறைந்த நடிகர் விவேக்கின் காமெடிகளும், படத்தின் வசனங்களும் மிக மிக சுமார் ரகம். படம் ஒரு இடத்தில்கூட பர்சனலாக கனெக்ட் ஆகவே இல்லை என்பதுதான் இந்தியன் -2வின் மிகப்பெரிய மைனஸ்!

எஸ்.ஜே.சூர்யாவை இரண்டே இரண்டு காட்சிகளில் காட்டிவிட்டு அவரைப்பற்றிய கதையை அடுத்த பாகத்தில் பார்க்கலாம் என இறுதியில் ட்ரெய்லரைப் போடுகிறார்கள். படம் முடிந்துவிட்டது என எழுந்திருக்கும்போது ஆரம்பமாகும் இந்த இரண்டு நிமிட ட்ரெய்லர்தான் உண்மையிலேயே ரசிக்கும்படி உள்ளது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனாலும் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது ‘இந்தியன் - 2’.