இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன் - இந்தியன் -2 
சினிமா

‘இந்தியன் 2’ ரிஜெக்டட்… ஷங்கரின் வீழ்ச்சிக்கு காரணங்கள் என்ன? - சுரேஷ் கண்ணன் எழுதும் மினி தொடர் - 1

'இந்தியன் - 2' படம் குறித்து தமிழ் சினிமா ரசிகர்கள் கழுவிக் கழுவி ஊற்றுவதை சேமித்து வைத்தால் காவிரிப் பிரச்சனையையே தீர்த்து விடலாம் போல. அப்படியொரு கொலைவெறி நெகட்டிவ் விமர்சனங்கள்!

Suresh Kannan

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் பிராஸ்தட்டிக் மேக்கப்பில் நடித்து சமீபத்தில் வெளியான இந்தியன்-2,  நாடு முழுக்க சுற்றிச் சுற்றி வந்து PAN INDIA பிரமோஷன்கள் செய்யப்பட்டாலும் கூட அதிக ஆரவாரமின்றி பெயருக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையே இந்தியன்-2 சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகத்தில், காமெடி நடிகர் செந்தில் சொல்லும் வசனம் போல ‘ரிஜெக்டட்’ என்கிற வார்த்தையை படம் பார்த்த பெரும்பாலோனோர் அனைவரும் அழுத்தம் திருத்தமாக கோபத்துடன் சொல்கிறார்கள்.

இந்தப் படம் குறித்து தமிழ் சினிமா ரசிகர்கள் கழுவிக் கழுவி ஊற்றுவதை சேமித்து வைத்தால் காவிரிப் பிரச்சனையையே தீர்த்து விடலாம் போல. அப்படியொரு கொலைவெறி நெகட்டிவ் விமர்சனங்கள்!

“இது ஷங்கர் டைரக்ட் செஞ்ச படம்தானா?”

“ஷங்கர் படத்துல வழக்கமா இருக்கிற ஸ்கிரீன்ப்ளே மேஜிக் இதுல சுத்தமா இல்லையே ப்ரோ.. ஒரு சீன்ல கூட கனெக்ட் ஆக முடியலையே?!”

“செட் ஆகாத பிராஸ்தட்டிக் மேக்கப்பைத் தாண்டி கமலின் நடிப்பைப் பார்க்கவே முடியல!”

“ஆக்சுவலி என்னாச்சுன்னா… ஷங்கர் ஒரு படம்தான் எடுத்தாரு. ஆனா அதை ரொம்ப பெருசா எடுத்துட்டாரு. செலவு செஞ்சு எடுத்த அந்த ஃபுட்டேஜ் எல்லாம் வீணாகக்கூடாதுன்னு பாகம் இரண்டா மாத்தி பிஸ்னஸ் பண்ணிட்டாரு. உண்மையில் பாகம் மூணுலதான் நல்ல மேட்டர் இருக்கு போல”

“இது இந்தியன் தாத்தாவோட வர்மம் இல்ல… நம்மளோட கர்மம். டிக்கெட் காசு வேஸ்டாயிடுச்சு பிரதர்”...

இப்படியெல்லாம் சமூகவலைத்தளங்களிலும் திரையரங்கின் வாசல்களிலும் ரசிகர்கள் பேசிக் கொள்வதைப் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது.

கமல்ஹாசன், ஷங்கர்

ஷங்கரின் திரைப்படங்கள் மெகா ஹிட் ஆகி பாக்ஸ் ஆபிஸ் கல்லாவை கன்னாபின்னாவென்று நிரப்பிய அதே சமயத்தில் சில திரைப்படங்கள் சொதப்பவும் செய்தன. ‘பாய்ஸ்’ திரைப்படத்தை ஒற்றை வார்த்தையில் காட்டமாக விமர்சனம் செய்தது ஒரு வார இதழ். அதில் சித்தரிக்கப்பட்ட காட்சிகளை பலரும் விமர்சித்தார்கள். தமிழில் அதிரிபுதிரியான வெற்றி பெற்ற ‘முதல்வன்’, இந்தியில் ரீமேக் ஆன போது தோல்வியையே சந்தித்தது. உயிரைக் கொடுத்து விக்ரம் நடித்து வெளியான ‘ஐ’, வணிக ரீதியான வெற்றியைப் பெற்றாலும் அதில் சித்தரிக்கப்பட்ட குரூரமான காட்சிகளுக்காக விமர்சகர்களிடையே பலத்த கண்டனங்களைப் பெற்றது. 

ஆக பிரம்மாண்டமான வெற்றிகளைப் போலவே ஷங்கருக்கு சில பின்னடைவுகளும் ஏற்படாமல் இல்லை. வீழ்ச்சியும் அவரது படங்களுக்கு பழக்கமானதுதான். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ‘இந்தியன் 2’, இப்படி ஒட்டுமொத்தமாக எதிர்மறை விமர்சனங்களைச் சந்திப்பது இதுதான் முதன்முறை.  

இப்படிப்பட்ட சூழலில் இயக்குநர் ஷங்கரின் படைப்புலக பின்னணி மற்றும் இதர விவரங்கள் பற்றி ஒரு பிளாஷ்பேக் பாணியில் இந்த ‘மினி தொடரில்’  பார்ப்போம். 

என்னதான் ஆச்சு ஷங்கருக்கு.. ? சாம்பல் மேடுகளும் சூழும் புகை மண்டலமும்…

தமிழ் சினிமாவில் எத்தனையோ வெற்றிகரமான கமர்ஷியல் திரைப்பட இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். அந்த நீண்ட வரிசையின் உச்சம் என்று ஷங்கரைச் சொல்லலாம். 

வெகுசன திரைப்பட பாணியை பொதுவாக இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, பக்கா கமர்ஷியல் பாணி. வணிக சினிமாவின் பொதுவான மசாலா டெம்ப்ளேட்டை கண்ணை மூடிக் கொண்டு அப்படியே காலம் காலமாக பின்பற்றும் பாணி அது.  பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனைக் குவித்து கமர்ஷியல் வெற்றியின் மூலம் கல்லா கட்டுவதுதான் அதன் பிரதான நோக்கம். எஸ்.பி.முத்துராமன் முதற்கொண்டு ஹரி வரை பலரை இதற்கு உதாரணம் சொல்லலாம். 

மனைவியுடன் இயக்குநர் ஷங்கர்

இன்னொரு பிரிவும் இருக்கிறது. வெகுசன திரைப்படம் என்றாலும் அவற்றில் தன்னுடைய பிரத்யேகமான அடையாளத்தையும் அழகியலையும் பதித்து தனியாக கவனிக்க வைப்பார்கள். இந்த வரிசையில் ஸ்ரீதர், கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், மிஷ்கின் என்று பலரை உதாரணம் சொல்லலாம். முன்னது ‘மாஸ்’ சினிமாவிற்கான உதாரணம் என்றால் இந்தப் பிரிவு ‘கிளாஸ்’ சினிமாவிற்கான உதாரணம். 

இந்த ‘மாஸ்’ மற்றும் ‘கிளாஸ்’ ஆகிய இரண்டின் கச்சிதமான கலவை என்று ஷங்கரின் பாணியைச் சொல்லலாம். ஷங்கரின் படங்களில் ஹைடெக்கான பல விஷயங்கள் இருந்தாலும் ஒரு சராசரியான பார்வையாளனுக்கும் புரியும்படியான மெனக்கெடல் இருக்கும். ‘முன்வரிசை பார்வையாளனை மனதில் வைத்துக் கொண்டுதான் என்னுடைய படத்தின் ஒவ்வொரு காட்சியையும் எழுதுகிறேன்’ என்று ஒரு நேர்காணலில் சொல்கிறார் ஷங்கர்.  அதிநவீன ரோபோக்கள் இருக்கும் அதே படத்தில்தான் ‘இன்னாடி இது?’ என்று சென்னை மொழியில் மோவாயில் கை வைத்து வியக்கும் அடித்தட்டு பெண்மணியும் இருப்பார். இந்த இரண்டு முனைகளையும் உறுத்தாமல் இணைப்பதில் ஷங்கர் விற்பன்னர். 

PAN INDIA என்கிற லேபிளில், இந்தியப் பார்வையாளர்கள் அனைவருக்குமான சினிமா என்கிற வகைமை இப்போது பிரபலமாக அடிபட்டுக் கொண்டிருந்தாலும் தமிழ் சினிமா எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் அதை சாதித்துக் காட்டியிருக்கிறது. பெரும் பொருட்செலவில் உருவான  ‘சந்திரலேகா’ அப்படியொரு சிறந்த முன்னுதாரணம். ஆனால் அப்படி பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் மிக அபூர்வமாகவே முந்தைய காலக்கட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது. 

ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத்

ஆனால் அந்தப் பாணியை தொடர்ச்சியாக உருவாக்கி அதை ஒரு டிரெண்டாகவே மாற்றி வெற்றியும் படைத்துக் காட்டியதை ஷங்கரின் தனித்துவமான பாணி எனலாம். பிரம்மாண்டம் என்றாலே ஷங்கரின் திரைப்படம் என்கிற பிரத்யேகமான அடையாளத்தைச் சம்பாதித்திருக்கிறார். VFX நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்தி அதையும் ஒரு வணிகத்திற்கான வழியாக மாற்றினார். அந்தந்த துறையில் இருக்கிற மிகச்சிறந்த கலைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களின் திறமைகளை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட சிறந்த இயக்குநராகத் திகழ்கிறார்.

இதன் மூலம் தமிழ் சினிமாவின் வணிகம் கற்பனைக்கும் எட்டாதபடி சர்வதேச எல்லையில் பரந்து விரிந்தது. கோடிகளில் உருவாக்கப்படும் பிரம்மாண்ட படைப்பு என்பது எப்போதோ நடக்கும் அபூர்வ நிகழ்வாக அல்லாமல் ஒரு தொடர்ச்சியான சாதனையாக மாறியது. இந்தப் பாணி இதர தென்னிந்திய மொழித் திரைப்படங்களுக்கும் பரவியதை ஷங்கரின் சாதனை எனலாம். ஏனெனில் அவரது வருகைக்குப் பின்னரே தமிழ் சினிமா வணிகத்தின் எல்லை விரிந்தது. இந்தப் போக்கு ஒட்டுமொத்த இந்தியச் சினிமாவைப் பாதித்தது. 

1998-ல் வெளியான ‘ஜீன்ஸ்’ திரைப்படம் அப்போதே 20 கோடி செலவில் உருவானது. அந்தச் சமயத்தில் இந்தியச் சினிமாவிலேயே அதிக பொருட்செலவில் உருவான திரைப்படமாக இது இருந்தது. அதைப் போலவே 60 கோடி பட்ஜெட்டில் உருவான ‘சிவாஜி’, இந்தியச் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்ததோடு வசூலிலும் சாதனை புரிந்தது. பல கோடிகளில் சம்பளம் வாங்கும் இயக்குநராக ஷங்கர் உயர்ந்தார். கமல்ஹாசனை வைத்து திட்டமிடப்பட்ட ‘ரோபோ’, பிறகு ரஜினிக்காக மாற்றப்பட்டு ‘எந்திரனாகி’ அதுவும் வசூலில் சாதனை புரிந்தது. 

இந்தியன் 2 குழுவினருடன் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர்

ஷங்கரின் இந்த பிரமாண்டமான வெற்றிகளும் சாதனைகளும் எளிதில் கிடைத்தவை அல்ல. ஒவ்வொரு காட்சிக்காகவும் ஒவ்வொரு ஃபிரேமிற்காகவும் அசுரத்தனமான உழைப்பைக் கொட்டுவதில் ஷங்கர் சளைத்தவர் அல்ல. ‘ஆயிரம் நபருக்கு பெயிண்ட் அடித்து ஆட வைப்பவர்’ என்று கிண்டலடிக்கப்பட்டாலும், பாடல் காட்சிகளை திரும்பத் திரும்ப பார்த்து ரசிக்கும் வகையில் சிரத்தையுடன் உருவாக்கும் இயக்குநர்களில் சிறந்தவர் ஷங்கர். இந்த வகையில் ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களின் உழைப்பிற்கு நியாயம் சேர்ப்பவர். 

மேற்குறிப்பிட்ட சாதனைப் பட்டியலில் இடம் பெற்ற படம்தான் இந்தியன். கமல்ஹாசனின் வித்தியாசமான ஒப்பனை, நடிப்பு, ரஹ்மானின் அட்டகாசமான பாடல்கள், சுஜாதாவின் ‘நறுக்.. சுறுக்’ வசனங்கள், திரைக்கதை, ஜீவாவின் அற்புதமான ஒளிப்பதிவு போன்ற காரணங்களுக்காக மக்கள் அந்தப் படத்தைக் கொண்டாடினார்கள். லஞ்சம் என்கிற புற்றுநோய் ஒட்டுமொத்த தேசத்தையே கரையான் போல அரித்து வருவதை உணர்ச்சிகரமாகவும் அழுத்தமாகவும் சித்தரித்த விதத்தில் இந்தியன் அனைவரையும் கவர்ந்தார். இன்றும் கூட ரசித்துப் பார்க்கும்படியாக முதல் பாகம் அமைந்தது. 

இந்தியன் இரண்டாம் பாகத்திலும் ஷங்கரின் உழைப்பிற்கு குறைவில்லை என்பது அதன் மேக்கிங்கைப் பார்த்தால் தெரிகிறது. என்றாலும் பெரும்பான்மையான மக்கள் இந்தப் படத்தை ரசிக்க முடியாமல் போனதற்கு காரணம் என்னவாக இருக்கும்? ரஹ்மான் இல்லாததா.. சுஜாதாவின் திரைக்கதை, வசன பங்களிப்பு இல்லாததா..? பல வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் தாமதமாக உருவானது காரணமா?

தொடர்ந்து பேசுவோம்!