ஜெயம் ரவி - ஆர்த்தி 
சினிமா

ஜெயம் ரவி - ஆர்த்தி விவகாரம் : மனைவியின் சந்தேக டார்ச்சர், மாமியாரின் சம்பள டார்ச்சர்தான் காரணமா?

இதற்கிடையே ஜெயம் ரவி - ஆர்த்தி விவகாரத்தில் என்ன நடந்தது என விசாரித்தோம். மனைவி, மாமியார் என இருதரப்பில் இருந்துமே ஜெயம் ரவியை டார்ச்சர் செய்ததுதான் விவாகரத்து வரை வந்திருப்பதற்கான காரணம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

Aathira

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்குதான் கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக இருக்கிறது. மனைவியை விட்டு விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்த ஜெயம் ரவி, பிறந்தநாளான நேற்று விவாகரத்து கேட்டு வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால், இன்றோ இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக ஆர்த்தி ரவி தனது தரப்பை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

‘’சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்துவிட்டதாக நான் உணர்கிறேன்’’ என்று அறிக்கையை தொடங்கியிருந்த ஆர்த்தி, ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவிரும்புவதாகவே சூசகமாக தெரிவித்திருக்கிறார். இறுதியில் தனது பெயரை ஆர்த்தி ரவி என்றே குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெயம் ரவி - ஆர்த்தி

இதற்கிடையே ஜெயம் ரவி - ஆர்த்தி விவகாரத்தில் என்ன நடந்தது என விசாரித்தோம். மனைவி, மாமியார் என இருதரப்பில் இருந்துமே ஜெயம் ரவியை டார்ச்சர் செய்ததுதான் விவாகரத்து வரை வந்திருப்பதற்கான காரணம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். 

ஆர்த்தி ஜெயம் ரவியை அதிக அளவில் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார். தற்போது நாக சைத்தன்யாவுடன் திருமணம் நிச்சயமாகியிருக்கும் சோபிதா துலிபாலாவுடன் ‘பொன்னியன் செல்வன்' படப்பிடிப்பின்போது ஜெயம் ரவி இணைத்து கிசுகிசுக்கப்பட அது ஆர்த்தியை மிகவும் பாதித்திருக்கிறது. இதனால் திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நள்ளிரவில் வருவது, ஜெயம் ரவியிடம் இரவு நேரத்தில் போனை ஆன் செய்யச்சொல்லி வீடியோவில் ரூமை 360 ஆங்கிளில் காட்டச் சொல்வது என சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்திருக்கிறார். அதோடு ஆர்த்தியின் அம்மா சுஜாதா டிவி சீரியல் தயாரிப்பில் இருந்து சினிமா தயாரிப்புக்கு வந்தார். 

‘கோமாளி’ ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தப்பிறகு அடுத்தப்படத்தை நாங்களே தயாரிக்கிறோம் என சுஜாதா விஜயக்குமார் ‘பூமி’ என்கிற படத்துக்கு கால்ஷீட் கேட்டிருக்கிறார். ‘கோமாளி' ஹிட்டால் அடுத்தப்படத்துக்கு ஜெயம் ரவிக்கு சம்பளமாக மிகப்பெரிய தொகையை பல தயாரிப்பாளர்கள் தர முன்வந்த நிலையில் மாமியாரும், மனைவியும் கேட்பதால் ‘பூமி’ படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் ஜெயம் ரவி. இந்தப்படத்தின் இயக்குநர் லட்சுமணன். 

ஜெயம் ரவி - ஆர்த்தி

ஆனால், பட ரிலீஸின் போது ஃபினான்ஸ் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்க ‘பூமி' படத்தின் ரிலீஸ் தாமதமானது. இதற்கிடையே ‘பூமி' படத்தின் கதையும் இன்னொருவருடையது, கதையை திருடிவிட்டார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இடையில் கொரோனா லாக்டவுனும் சேர்ந்துகொள்ள 2021-ல் தான் படம் ரிலீஸானது. 

அதுவும் தியேட்டர் ரிலீஸாக இல்லாமல் ஹாட்ஸ்டாரில் ரிலீஸானது. இந்தப்படமும் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பின்னடைவையே சந்தித்தது. அதோடு ஜெயம் ரவிக்கு சம்பளமாகப் பேசப்பட்ட தொகையும் தரப்படவில்லை.

இதற்கிடையே ஜெயம் ரவியை உருவாக்கிய அவரது அண்ணன் ராஜா ‘தனி ஒருவன் -2’ இயக்குவதாகச் சொல்லிக் கூப்பிட்டும் ரவியால் நடிக்கப்போக முடியவில்லை. காரணம் ஆர்த்தி மற்றும் சுஜாதா. இவர்கள்தான் ஜெயம் ரவியின் கால்ஷீட்டையும் நிர்வகித்திருக்கிறார்கள்.

‘’ஒரு பக்கம் மனைவியும் டார்ச்சர் தர, இன்னொரு பக்கம் மாமியாரும் சினிமா தயாரிப்பு, கதைகேட்பில் இறங்கி டார்ச்சர் செய்ததால் ஜெயம் ரவி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். உடல்நலக்குறைவு ஏற்பட்டதோடு, மனரீதியாகவும் பாதிக்கப்பட்டார். இதனால் வீட்டில் இருந்து வெளியேறி ஒரு மாத காலம் வெளியே தங்கியுள்ளார் ஜெயம் ரவி. இந்நிலையில் ஜெயம் ரவியின் விஷயம் அண்ணன் ராஜாவுக்குத் தெரியவந்து அவர்தான் இருவீட்டிலும் பேசி விஷயத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றார்'’ என்கிறார்கள் ஜெயம் ரவிக்கு நெருக்கமானவர்கள்.