ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘இந்தியன் - 2’ மிகப்பெரிய தோல்விப்படமாக மாறியிருக்கிறது. நஷ்டமே கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் இருக்கும் என்கிறார்கள். இதற்கிடையே இந்த தோல்வியை சரிகட்ட ‘இந்தியன்- 3’ படத்தையும், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் ‘Thuglife’ படத்தையும் விரைவாக வெளியிட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
‘இந்தியன் - 2’, ‘இந்தியன் - 3’, ‘Thuglife’ என கமல்ஹாசனின் எல்லா படங்களின் ரிலீஸ் உரிமையையும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வாங்கிவிட்டதால் நஷ்டம் ஏற்பட்டாலும் லைகாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்கிறார்கள். விக்ரம் வெற்றிக்குப்பிறகு விறுவிறுவென ஏறிய கமல்ஹாசன் மார்க்கெட் ‘இந்தியன் 2’ தோல்வியால் கடுமையானச் சரிவை சந்தித்திருக்கிறது. ‘Thuglife’ படத்தின் மற்ற மொழி உரிமையை விற்பது சிக்கிலாகியிருக்கிறது.
இதற்கிடையே ஜூலை 12-ம் தேதி ‘இந்தியன்-2’ தியேட்டர்களில் ரிலீஸ் ஆன நிலையில் 6 முதல் 8 வாரங்களுக்குப்பிறகு, படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியிருக்கும் நெட்ஃபிளிக்ஸ் தனது தளத்தில் வெளியிடுவதுதான் ஒப்பந்தம். ஆனால், தியேட்டர்களில் இருந்து ‘இந்தியன் - 2’ தூக்கப்பட்டுவருவதால் படம் வெளியான நான்காவது வாரத்திலேயே அதாவது ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திலேயே படத்தை ஓடிடியில் வெளியிடுவது என முடிவெடுத்திருக்கிறது நெட்ஃபிளிக்ஸ்!