கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் 1996-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தப் படம் ‘இந்தியன்’. கமல்ஹாசன், மணிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், மனோரமா, கவுண்டமணி, செந்தில் எனப் பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த திரைப்படம் ஒரு கிளாஸிக்காக அமைந்தது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது என கமல்ஹாசன் - ஷங்கர் முடிவெடுத்தனர்.
2017-ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்ற கமல்ஹாசன் அதன் இறுதிநாள் நிகழ்வில் 'இந்தியன் 2' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் ஷங்கருடன் இணைந்து வெளியிட்டார். ஆனால், படப்பிடிப்பில் பல்வேறு பிரச்சனைகள் நடக்க, இடையில் கொரோனா வர, படத்தில் நடித்தவர்களில் விவேக் உள்பட சிலர் மரணிக்க எனப் பல சிக்கல்களை 'இந்தியன் 2' எதிர்கொண்டது. எல்லாம் முடிந்து கடைசியாக இந்த ஆண்டு ஜூலை மாதம் படம் ரிலீஸானது.
ரிலீஸுக்கு முன்பாக ஒரு சர்ப்ரைஸாக 'இந்தியன் 3' வர இருப்பதாகவும் பேட்டிகளில் கமல்ஹாசன் சொன்னார். அதை உறுதிப்படுத்தும் விதமாக 'இந்தியன் 2' படத்தின் இறுதியில் 'இந்தியன் 3' படத்துக்கான 3 நிமிட ட்ரெய்லரும் வெளியானது. ஆனால், 'இந்தியன் 2' படத்திலேயே கடைசியில் வந்த அந்த 3 நிமிட ட்ரெய்லர்தான் சிறப்பாக இருந்தது என விமர்சனங்கள் வெளியாகி, 'இந்தியன் 2' மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் படத்தை எடுத்த லைகா நிறுவனம் மொத்தமாக நஷ்டத்தில் கவிழ்ந்தது.
இதற்கிடையே 'இந்தியன் 3' படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் செய்யலாம் என லைகா நிறுவனம் முயற்சி எடுத்தது. ஆனால், திரைப்பட விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கினால் பெருத்த நஷ்டத்தை சந்திக்கலாம் என்பதோடு, 'இந்தியன் 2 படத்துக்கான இழப்பீட்டையும் கேட்பதால் 'இந்தியன் 3' தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்திருக்கிறது.
இதனால் 'இந்தியன் 3' படத்தை நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. பட்ஜெட் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே படம் ஓடிடி-யில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்!