கமல்ஹாசன் 
சினிமா

''எழுத்தாளர் சுஜாதா தம் அடிக்க என் வீட்டுக்குத்தான் வருவார்'’ - கமல்ஹாசன் பகிர்ந்த 'எந்திரன்' கதை!

'' ‘இந்தியன்’ படத்துக்கு எழுத்தாளர் பாலகுமாரன் திரைக்கதை எழுதிக்கொண்டிருந்தார். திடீரென ஷங்கர் சுஜாதவையும் எழுத அழைத்துவந்தார். எனக்கு பயங்கர சந்தோஷம். என்னுடைய எல்டாம்ஸ் ரோடு வீடு என்பது எழுத்தாளர்கள் சந்திக்கும் இடமாகவும் அப்போது இருந்தது.'' - கமல்ஹாசன்!

Lavanmani

‘இந்தியன் - 2’ படத்தின் ப்ரமோஷனுக்காக உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். காலை ஜப்பானில் காபி… மாலை   நியூயார்க்கில் கேபரே என்பதுபோல, காலை சென்னையில் ட்ரெய்லர் ரிலீஸ், மாலை மும்பையில் பிரஸ்மீட், இரவு மலேசியாவில் பேட்டி என 24/7 ‘இந்தியன்' மயமாகவே உள்ளார்.

மலேசியாவில் 'இந்தியன்- 2' ப்ரமோஷனுக்காக ஒரு இணையதளத்துக்கு பேட்டி அளித்தவரிடம் ‘எந்திரன்' படம் குறித்து கேட்கப்பட ஒரு சுவாரஸ்ய கதை சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன்.

சித்தார்த், கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யா

‘’எனக்கும் சுஜாதாவுக்கும் இருக்கும் தொடர்பு குறித்து இப்போதைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் சிறுவனாக இருந்தபோதே எனக்கு அவரைத்தெரியும். அவருக்கும் என்னைத்தெரியும். நான் எல்டாம்ஸ் ரோடு வீட்டின் கீழே கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும்போது சுஜாதா என் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவரும், என் அண்ணன்களும் எங்கள் வீட்டின் மொட்டைமாடியில் சிகரெட் பிடிப்பதற்கென்றே ஒரு ரகசிய அறையை வைத்திருந்தார்கள். அப்போது அங்கே வருபவரை நான் பார்ப்பேன்.  

சுஜாதாவின் எழுத்துகளைப் படித்து அவருக்கு ரசிகனானேன். அவரால்தான் எனக்கும் எழுதவேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. நான் பத்திரிகைகளுக்கு சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி அனுப்புவதற்கு முன்பு சுஜாதாவிடம் காட்டுவேன். அவர் சில விஷயங்களைத் திருத்தி தருவார். அதன்பிறகுதான் பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். 

கமல்ஹாசன்

‘இந்தியன்’ படத்துக்கு எழுத்தாளர் பாலகுமாரன் திரைக்கதை எழுதிக்கொண்டிருந்தார். திடீரென ஷங்கர் சுஜாதவையும் எழுத அழைத்துவந்தார். எனக்கு பயங்கர சந்தோஷம். என்னுடைய எல்டாம்ஸ் ரோடு வீடு என்பது எழுத்தாளர்கள் சந்திக்கும் இடமாகவும் அப்போது இருந்தது. அப்போது ‘ஐரோபோ’ என்கிற நாவல் குறித்து நாங்கள் அங்கே அடிக்கடி கலந்து விவாதிப்போம். சுஜாதாதான் நான் ‘ரோபோ’ படத்தில் நடிக்கவேண்டும் என விரும்பினார்.

டெஸ்ட் ஷூட் எல்லாம் எடுத்தோம். ஆனால், சினிமா துறை என்பது ஒரு சிக்கலான துறை. இதில் பல விஷயங்கள் சம்பந்தப்பட்டிருக்கிறது. பல கணக்குகள் இருக்கிறது. என்னுடைய சம்பளம், என்னுடைய கால்ஷீட், அப்போதைய மார்க்கெட் என பல விஷயங்களால் என்னால் ‘எந்திரன்' படத்தை செய்யமுடியாமல் போனது. நான் வெளியேறியதும் படம் டிராப் ஆகிவிடும் என்றுதான் நினைத்தேன். ஆனால், என்னுடைய நண்பர் ரஜினிகாந்த் அங்கிருந்து பிடித்து அதைக்கொண்டுபோய் பெரிய வெற்றி படமாக்கிவிட்டார். ஒரு ஐடியாவை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு அதைதிறம்பட செயல்படுத்தி வெற்றி காண முடியும் என்பதற்கு எந்திரன் ஒரு உதாரணம்’’ எனப்பேசியிருக்கிறார் கமல்ஹாசன்!