கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் எனப் பலரும் நடித்திருக்கும் 'Kalki 2898 AD' படம் ஜூன் 27-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. நடிகை சாவித்ரியின் பயோபிக்கான ‘நடிகையர் திலகம்' படத்தை இயக்கிய நாக் அஷ்வின்தான் இந்தப்படத்தையும் இயக்கியிருக்கிறார்.
விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி இந்த உலகத்துக்குள் உருவெடுத்து வரப்பார்க்க, அவரை அழிக்கத்துடிக்கிறது வில்லன் கும்பல். மகாபாரதக் கதையை பின்னணியாக வைத்துக்கொண்டு 'Kalki 2898 AD' படத்தை உருவாக்கியிருக்கிறார் நாக் அஷ்வின்.
இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தின் ப்ரமோஷனுக்காக அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்கா தத் ஒரு கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன் தேவர் மகன்ஷூட்டிங்கின் போது நடந்த குட்டிக் கதையை பகிர்ந்துகொண்டார்.
''சிவாஜி கணேசன் ஓர் ஆண்டுகாலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இந்தச்சூழலில்தான் ‘தேவர் மகன்' படத்தில் நடிக்கவந்தார். அது 1991- 92 காலகட்டம். கம்ப்யூட்டர்கள் அப்போதுதான் வந்திருந்தது. சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த காட்சிகளை கட் செய்து ஷூட்டிங்கின்போது அவரிடம் காட்டினேன். பார்த்தவர் அதிர்ந்துவிட்டார். 'நான் ஓர் ஆண்டுகாலமாக நடிக்கவில்லை என்பது கம்ப்யூட்டரில் தெரிகிறது. இன்னும் ஒருநாள் நாம் இங்கேயே தங்கி க்ளோஸ்அப் ஷாட்களை மீண்டும் எடுக்கலாமா' எனக் கேட்டார்'’ என்று குட்டிக் கதை சொன்னார் கமல்ஹாசன். இந்தக் கதையை மிகவும் ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் அமிதாப் பச்சன்.