ஃபகத் ஃபாசில், ஆவேஷம் 
சினிமா

பரங்கிமலை ஜோதி, மஞ்சும்மள் பாய்ஸ், பின்னே ‘ஆவேஷம்’… மலையாள சினிமாவும், மெட்ராஸும்!

2024-ம் ஆண்டு மலையாள சினிமாவின் வெற்றிகள், அதன் கதைக்களம் மற்றும் கதைமாந்தர்கள் பற்றிய உரையாடல்கள் இப்போது கேரளாவை தாண்டி உலகம் முழுவதும் பேசப்படுவதில் அளவில்லா சந்தோஷம். அதனையொட்டி இங்கு நான் பகிர்ந்துகொள்ள விரும்புவது எனது மனதில் ஆழமாக பதிந்திருக்கும் இரண்டு தனிப்பட்ட அனுபவங்கள்.

Faisal Saleem

கேரளாவுக்கு வெளியே வாழும் மலையாளியான எனக்கு, மலையாள சினிமாவின் அழகியல், அதன் கதைகள், கதை மாந்தர்களின் நுணுக்கங்களைப் பற்றி வேற்று மொழி மனிதர் யார் பேசினாலும் எனக்குள் அது ஒருவிதமான சிலிர்ப்பை உண்டாக்கும். என் மாணவப்பருவம் முதல் தற்போதைய பணியிடம் வரை, நண்பர்கள், சக ஊழியர்களுடன் மலையாள சினிமா குறித்த உரையாடல்களில் என்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்வேன். மலையாள சினிமாவின் மீது எனக்கு இருக்கும் பெருமிதமும், பேரன்புமே இதற்கான காரணம்!

சென்னையில், நான் எங்கு தங்கியிருக்கிறேன் என்று உள்ளூர்வாசிகள் என்னிடம் கேட்டால், நான் "செயின்ட் தாமஸ் மவுண்ட்" என்பேன். ஆனால், பலருக்கும் செயின்ட் தாமஸ் மவுன்ட் என்பதைவிடவும் "ஜோதி தியேட்டர் பக்கத்துல" என்று சொன்னால்தான் புரியும். அப்படி சொன்னவுடனே அவர்கள் முகத்தில் ஒரு கேலிப் புன்னகை அரும்பும். காரணம் 90-களின் பிற்பகுதியில் பி-கிரேடு மலையாளத் திரைப்படங்கள், வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் ‘ஷகீலா’’ படங்களைத் திரையிட்டதற்காகவே பிரபலமான திரையரங்கம் ‘ஜோதி தியேட்டர்'. அதனால்தான் அந்தப்புன்னகையும், அந்தக்கேலியும்.

மஞ்சும்மள் பாய்ஸ்

ஆனால், இந்த ஆண்டு, ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய கட்அவுட்டை அதே ஜோதி தியேட்டரின் வாசலில் பார்த்தபோது, எனக்குள் அந்தக் காட்சி என்னவோ செய்தது. இதயம் ஒருவித பரவசத்தில் திளைத்தது. தவறான மலையாள சினிமாக்களுக்கு அடையாளமாக இருந்த அதே ஜோதி தியேட்டரில் இன்று தமிழகமே கொண்டாடிய ‘மஞ்சும்மள் பாய்ஸ்' கட் அவுட் இருப்பது மலையாள சினிமா கடந்துவந்திருக்கும் பாதையை மிகத்துல்லியமாக எடுத்துசொல்லும் ஒரு வரலாற்று ஆவணம்.

இரண்டாவது, நான் வசிக்கும் செயின்ட் தாமஸ் மவுன்ட்டில் வாழும் பெரும்பான்மையானோர் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினர். ஆங்கிலோ-இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில், திருவிழாக்கள் அல்லது திருமணங்களின்போது முழு பகுதியுமே வண்ண விளக்குகளால் ஒளிறும். தமிழ் சினிமா பாடல்கள் ஓயாமல் ஒலிக்கும். ஆட்டம், பாட்டம், குடி என ஊரே கொண்டாட்டமாக இருக்கும். 

ஃபகத் ஃபாசில் - ஆவேஷம்

ஐந்து வருடங்களாக இங்கு வசிக்கும் எனக்கு, நேற்று வரை எந்த திருமண விழாவிலும் மலையாள திரைப்படப் பாடல்களை கேட்ட நியாபகம் இல்லை. ஆனால் நேற்று, முதல்முறையாக பக்கத்து வீட்டு திருமண விழாவில் ஃபகத் ஃபாசில் நடித்த ‘ஆவேஷம்’ படத்தின் "இலுமினாட்டி" மற்றும் "ஓடிமக" பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது. என் இதயத்தில் ஆழமாக இருந்த கேரளத்தின் இசையை, பழைய மெட்ராஸின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றான மவுன்ட்டில் கேட்ட அனுபவம் என் ஆன்மாவை தொட்டது. எனக்குள் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.

மலையாள சினிமாவின் அழகியல், தொன்மம் மற்றும் அதன் வளர்ச்சியை இந்த இரண்டு அனுபவங்களும் எனக்குள் மிக ஆழமாக உணர்த்தியது. 2024-ல் மலையாள சினிமாவின் வெற்றிகள், அதன் கதைகள் மற்றும் கதைமாந்திரங்கள், கேரளத்தின் எல்லைகளை மீறி, உலகம் முழுவதும் மக்களை கவர்ந்ததில் பெருமிதம் கொள்கிறேன்.

ஒரு எழுத்தாளனாக, சினிமா கலையை நேசிப்பவனாக மலையாள சினிமா அடுத்தக்கட்டம் நோக்கிப் பயணிப்பதைப் பார்த்து தனிப்பட்ட முறையில் உந்துதலும், உத்வேகமும் கொள்கிறேன்!