பாலியல் புகார்கள் தொடர்பாக மலையாள திரையுலகம் பெரும் சிக்கலை சந்தித்துவருகிறது. நேற்று கேரள நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரான மோகன்லால் பத்திரிகையாளர்கள் முன்பு மெளனம் கலைத்த நிலையில், மலையாள திரையுலகின் மூத்த நடிகரான மம்மூட்டி ஹேமா கமிட்டி தொடர்பாக எழுந்திருக்கும் விவாதங்கள் குறித்து அவரது பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.
‘’மலையாள திரையுலகம் தற்போது எதிர்கொள்ளும் நிகழ்வுகளைப் பற்றிய பதிவுதான் இது. நடிகர்களின் அமைப்பும், தலைமையும் இந்நிகழ்வுக்கு முதலில் பதில் தருவதே அமைப்பின் முறை. தலைமையின் பதிலுக்கு பிறகு, உறுப்பினராக என்னுடைய கருத்தை சொல்ல வேண்டும் என நம்பியதால்தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன்.
சினிமா என்பதே சமூகத்தின் ஓர் அங்கம்தான். சமூகத்தின் அனைத்து நன்மைகளும், தீமைகளும் சினிமாவிலும் உண்டு. இந்த சமூகம் திரையுலகை தீவிரமாக உற்று கவனிக்கும் துறையாக இருக்கிறது. அதனால்தான் இங்கு நடக்கும் சிறிய, பெரிய விஷயங்கள் எல்லாம் பெரிதாக விவாதத்துக்குள்ளாகிறது.
இந்தத் துறையில் விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க திரைத்துறையினர் கவனமாக இருக்க வேண்டும். கேரள அரசின் உத்தரவின்படி திரையுலகில் நடந்திருக்கக் கூடாத நிகழ்வை ஆராய்ந்து, அறிக்கை தயார் செய்து, தீர்வுகளை முன்வைத்து, நடவடிக்கைகளைப் பரிந்துரைத்திருக்கிறது நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் தீர்வுகளை நான் மனதார வரவேற்கிறேன்.
திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களும் ஒன்றுபட்டு அவற்றை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. தற்போது எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக போலீஸ் விசாரணை கடுமையாக நடந்துவருகிறது. நீதிபதி ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையும் நீதிமன்றம் முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது. காவல்துறை நேர்மையாக விசாரிக்கட்டும். தண்டனைகளை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்.
திரையுலகில் எந்த பவர் சென்டரும் இல்லை. சினிமா எனும் களத்தில் அப்படிட்ட எந்த பவர் சென்டர்களும் நிலைத்திருக்க முடியாது. நீதிபதி ஹேமா குழு அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும் சட்ட தடைகள் எதுவும் இருந்தால் அதை சரிசெய்யவும் கேட்டுக்கொள்கிறேன். சினிமா வாழவேண்டும் என்பதே இறுதி நோக்கம்!’’
மம்மூட்டியின் இப்பதிவு இவ்விவகாரத்தில் அவரின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.