‘கோலிசோடா’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இடத்தைப் பிடித்தவர் ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய் மில்டன். ‘10 எண்றதுக்குள்ள', ‘கடுகு', ‘கோலிசோடா-2’ ஆகிய படங்களைத் தமிழில் இயக்கியிருக்கும் விஜய் மில்டன் சமீபத்தில் இயக்கிய ‘மழை பிடிக்காத மனிதன்' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது.
விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப்படத்தை இயக்குநரான விஜய் மில்டன் பத்திரிகையாளர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை பார்த்துவிட்டு அதிர்ச்சி பேட்டி ஒன்றை அளித்தார். அதில் தனக்குத் தெரியாமல் படத்தின் ஆரம்பித்தின்போதே ஸ்பாய்லர் போல 2 நிமிட காட்சி சேர்க்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார். இயக்குநருக்கேத் தெரியாமல் படத்தில் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது பெரிய சர்ச்சையாக, நேற்று முதல் அந்த 2 நிமிட காட்சி நீக்கப்பட்டது. இதற்கிடையே படத்தின் கதாநாயகனான விஜய் ஆண்டனி தனக்கும் அந்த 2 நிமிட காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
‘’அது நான் இல்லை’’ என்று தலைப்பிட்டு விஜய் ஆண்டனி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ‘’மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் 2 நிமிடக்காட்சியை , தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக என் நண்பர், படத்தின் இயக்குநர் திரு.விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை. இது ‘சலீம்-2’ இல்லை’’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.
விஜய் ஆண்டனியும் அந்த 2 நிமிட காட்சியை சேர்க்கவில்லை என்றால் யார் சேர்த்தது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. விஜய் ஆண்டனியின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக இயக்குநர் விஜய் மில்டன் ‘’தயாரிப்பாளருக்கும் எனக்கும் இருந்த பிரச்னை சரத்குமார் அவர்கள் தலையீட்டால் தீர்க்கப்பட்டு இன்று முதல் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படுகிறது. ஆகஸ்ட் 9 முதல் தெலுங்கு பதிப்பு #Toofan வெளியாகிறது. அதை முன்னோக்கிய பயணத்தை தொடர்வோம். குரல் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி'’ எனத் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் விஜய் மில்டனின் குற்றச்சாட்டு வெறுமனே ஒரு பப்ளிசிட்டி ஸ்டன்ட், படத்தை ப்ரமோட் செய்வதற்காக விஜய் மில்டனும், விஜய் ஆண்டனியும் சேர்ந்து இப்படிச்செய்திருக்கிறார்கள் என்கிற பேச்சும் கோலிவுட்டில் கிளம்பியிருக்கிறது!