செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன்பாக சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார் நடிகர் நிவின் பாலி. ‘’நான் ஒரு பெண்ணை தவறாகப் பயன்படுத்தியதாக ஒரு பொய் செய்தியை கண்டேன். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன். இதற்குப் பொறுப்பானவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். உங்கள் அக்கறைக்கு நன்றி. மீதமுள்ளவை சட்டப்படி கையாளப்படும்’’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதன்பிறகு இரவு 9 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த நிவின் பாலி குற்றம் சுமத்தியிருக்கும் பெண்ணை நேரில் சந்தித்ததே இல்லை எனவும், குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனும் ஆணித்தரமாகப் பேசியிருக்கிறார்.
“ஊனுக்கல் காவல் நிலைய அதிகாரி ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற புகாரின் பேரில் என்னைத் தொடர்பு கொண்டார். ஆனால், அவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கவனத்தை ஈர்ப்பதற்காக சிலர் சொல்வார்கள். பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றார். எனது வழக்கறிஞரிடம் இதுகுறித்து பேசியபோது அவரும் இதே கருத்தை சொன்னார். ஆனாலும் அப்போது நான் புகார் அளிக்க விரும்பினேன். அப்படிச் செய்யாதது தவறு என இப்போது உணர்கிறேன்'’ என்று சொல்லியிருக்கிறார் நிவின் பாலி.
எனினும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஒருவருடன் தனக்கு நெருங்கிய பழக்கம் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார் நிவின் பாலி. குற்றம் சாட்டப்பட்டிருப்பவரில் ஒருவர் பல்வேறு மலையாள படங்களுக்கு நிதி வழங்கி வரும் வகையில் தனக்கும் நெருக்கமானவர் எனச் சொல்லியிருக்கிறார்.
குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் நாளில் நிவின் பாலி துபாயில் இருந்தாரா எனச் செய்தியாளர்கள் கேட்க, ‘’ ‘மலையாளி ஃப்ரம் இந்தியா’ திரைப்படம் மற்றும் ஒரு வெப் தொடரின் படப்பிடிப்பில் துபாயில் பிஸியாக இருந்தேன். துபாய் மாலில் வைத்து ஒரு பைனான்சியரை சந்தித்தேன். அப்போது அவரது நண்பர் ஒருவரும் அவரது குடும்பத்தினருடன் இருந்தார்’’ என்று சொல்லியிருக்கிறார் நிவின் பாலி.
‘’இதுபோன்ற போலி குற்றச்சாட்டுகள் கேரள சினிமாதுறையை கடுமையாக பாதிக்கும்… எனக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கிறார்கள். இதுபோன்ற பொய் செய்திகள் டிவியில் பிரேக்கிங் செய்தியாக ஓடும்போது அது என்னையும், என் குடும்பத்தினரையும் பாதிக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்’’ என்றும் நிவின் பாலி பத்திரிகையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஒன்றரை மாதத்துக்கு முன்பாக நிவின் பாலி மீது பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் வழக்குப்பதிவு செய்தபோது அதில் பாலியல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும், தன்னை நிவின் பாலி தன்னை தாக்கியதாக மட்டுமே வழக்குப்பதிவு செய்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் நிவின் பாலி செய்தியாளர்களிடம் பொய் சொல்லியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். சுனில் எனும் தயாரிப்பாளர் மூலம்தான் நிவின் பாலி தனக்கு அறிமுகமானார் என்றும், போதையில் வைத்து தன்னைப் பல நாள் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதற்கிடையே ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வழக்குப்பதியப்பட்டு விசாரணையும் மேற்கொண்ட ஊனுக்கல் காவல்துறை இதுகுறித்து ஏன் எந்ந செய்தியையும் வெளியிடவில்லை, வழக்கை முடித்துவைக்கவும் இல்லை என்கிற கேள்வியும் தற்போது எழுந்திருக்கிறது.
ஹேமா கமிட்டி அறிக்கையின் உண்மையான நோக்கம் திசைமாறுவதாகவும், பலர் இந்தச் சூழலை தங்கள் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக பயன்படுத்திக்கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கிறது!