மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நிவின் பாலி மீது கேரளாவில் உள்ள நெரியமங்கலம் எனும் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். ‘’சினிமாவில் நடிக்க வாய்ப்புத்தருவதாக சொல்லி துபாய் அழைத்துச்சென்று என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் நிவின் பாலி. அவரோடு இன்னும் 5 பேரும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்'’ என குற்றம்சாட்டியிருக்கிறார் அந்தப்பெண்.
எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீஸார் நிவின் பாலி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நிவின் பாலி மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் நிவின் பாலி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். நிவின் பாலியோடு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பவர்களில் முக்கியமானவர் திருச்சூர் ராகம் தியேட்டர் உரிமையாளர் ஏகே சுனில்.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) நிவின் பாலியால் பாதிக்கப்பட்ட பெண் அணுகியிருக்கிறார். பின்னர் இந்த சம்பவம் குறித்து எஸ்ஐடி ஊன்னுக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்து நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
நிவின் பாலி பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல் அந்தப்பெண்ணையும், அவரது குடும்பத்தினரை மிரட்டியதாகவும், பாதிக்கப்பட்ட பெண் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். நிவின் பாலி மீது பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு மலையாள திரையுலகையே ஆட்டம் காணவைக்கும்!